ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

பொக்கிஷம் விமர்சனம் - பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்


பொக்கிஷம் திரைப்படம் ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நாற்பத்தைந்து நிமிடங்களாக இருந்தது. நேற்று இந்த நீளம் குறைக்கப்பட்டது. ஏறக்குறைய 20 நிமிடங்களுக்கு மேல் படத்தின் சில தேவையற்ற காட்சிகளை குறைத்திருக்கிறார்கள். படத்தில் இடம் பெற்றுள்ள பல சிறிய பாடல்களும், கதைக்கு தேவையில்லாத சில காட்சிகளும் நீக்கப்பட்டு விட்டன. இதை இயக்குனர் சேரனே தெரிவித்துள்ளார்.


பெரும்பான்மையான ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனிடையே நேற்று கலைஞர் தொலைக்காட்சியிலும், இன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிபரப்பில் பங்கு பெற்ற சேரன், படத்திற்குண்டான வரவேற்பு போகப் போக அதிகரிக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.


மசாலாத்தனமான படங்களையே பார்த்துப் பழகிப் போன நமக்கு, பசங்க, நாடடோடிகள், பொக்கிஷம் மாதிரியான படங்கள்தான் பொக்கிஷமாக அமையும் என்பது உண்மையான திரைப்பட ரசிகர்களின் எதிர்பார்ப்பு. விமர்சனம் என்ற பெயரில் பிளாக்குகளில் எழுதுபவர்கள் ஒரு வரைமுறை இல்லாமல், என்ன வேண்டுமானால் எழுதலாம் என நினைப்பது தவறான ஒன்று.


மூத்த பதிவர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலரின் விமர்சனத்தை நானும் படித்தேன். அவர்கள் சேரனின் நடிப்பை மிகவும் குறை கூறியிருந்தார்கள். பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கத் தயங்கும் போது பாவம் அவர் என்ன மட்டும் என்ன செய்வார், இப்படித்தான் ஆட்டோகிராப் படத்திற்கும், விக்ரம், விஜய், பிரபுதேவா போன்ற நடிகர்கள் நடிக்க முன்வரவில்லை. அதன் பின்தான் சேரனே அந்த படத்தின் நாயகனாக நடித்தார். அது இந்த படத்திற்கும் நடந்திருக்கிறது. பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க மறுத்திருக்கின்றனர்.


இன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நேயரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது சேரன் இந்த ஆதங்கத்தை தெரித்திருந்தார். விஜய் போன்ற நடிகர்கள் நடித்திருந்தால் இந்த படத்திற்கான வரவேற்பும், வெற்றியும் பிரமாதமாக அமைந்திருக்கும் என குறைபட்டுக் கொண்டிருந்தார்.


நம் மூத்த பதிவர்கள், அப்படிப்பட்ட முன்னணி ஹீரோக்களுக்கு எது நல்ல படம், எது மசாலாப்படம் என புரிய வைத்து இம்மாதிரியான படங்களில் அவர்கள் நடிப்பதற்கு கால்ஷீட் வாங்கிக் கொடுக்கலாம் என்பது என் கருத்து.


வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என கண்டபடி விமர்சனம் எழுதுவதை தயவு செய்து குறைத்துக் கொள்ளுங்கள் என் அன்பான மூத்த பதிவர்களே.


சேரன் மாதிரியான இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் இல்லையென்றால் தமிழ் சினிமாவின் தரம் என்றோ தாழ்ந்து போயிருக்கும்.


படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாகச் சொல்லப்பட்டு, பின்னர் குறைக்கப்பட்ட ஆட்டோகிராப், மாபெரும் வெற்றி பெற்றது. அது போல இந்த படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கலாம்.


வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

பொக்கிஷம் - தமிழ் சினிமாவுக்கு


எத்தனையோ காதல் படங்களை பார்த்து வருகிறோம். ஆனால் அவற்றில் ஒரு சிலதான் நம் நெஞ்சில் நீங்காத இடத்தைப் பிடிக்கின்றன. அந்த ஒரு சில படங்களில் இந்த படமும் இடம் பெறும்.


இன்றைய தலைமுறை, காதல் கடிதம் என்ற ஒன்றைப் பார்க்கிறார்களா என்பது ஆச்சரியமான ஒன்றுதான். ஈமெயில், எஸ்எம்எஸ் என்ற அளவில்தான் அவர்களின் காதல் பரிமாற்றம் இருக்கிறது. மறந்து போன அல்லது மறக்கப்பட்ட அந்த காதல் கடிதங்களை இந்த படத்தின் வாயிலாக மீண்டும் ஞாபகப்படுத்தியிருக்கிறார் சேரன்.


ஒரு காட்சியில் காதலி பத்மப்ரியாவுடன் டிரங்கால் போட்டு பேசுவதற்காக அவர் தவிக்கும் தவிப்பைப் பார்க்கும் போது, இன்று பக்கத்து பக்கத்து அறையில் உட்கார்ந்து கூட செல்போனில் கூப்பிட்டு பேசுவதை நினைத்தால் , ஏதேதோ சொல்லத் தோன்றுகிறது. காதலியின் கையெழுத்துடன், அந்த காதல் உணர்வுகளை கடிதங்களின் வாயிலாக நாம் உணரும் அழகே தனிதான். காதல் கடிதம் எழுதிய காலத்து மக்களுக்குத்தான் அதன் ரசனை புரியும். கிறுக்கலான கையெழுத்தாக இருந்தால் கூட அது ஒரு ஓவியம் போலத்தான் தெரியும்.


இப்படி காதல் கடிதங்களைப் பற்றி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். அவற்றைத்தான் அழகான காட்சிகளாக வடிவமைத்திருக்கிறார் சேரன். கல்கத்தாவில் இருக்கும் சேரனுக்கும் நாகூரில் இருக்கும் பத்மப்ரியாவுக்கும் காதல். இந்த காதலுக்கு பாலமாக இருப்பதே அவர்களின் காதல் கடிதங்கள்தான். ஒரு சந்தர்ப்பத்தில் அந்த கடிதப் பரிமாற்றம் திடீரென நின்று விட பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.


காட்சிக்கு காட்சி காதல் கடிதங்களே வந்து கொண்டிருப்பது கொஞ்சம் தொய்வைக் கொடுத்தாலும், அதிலும் ஒரு ரசனை இருக்கத்தான் செய்கிறது. படத்தின் முடிவு நிச்சயம் எதிர்பார்க்காத ஒன்றுதான். திடீரென படத்தை முடித்து விட்டது போல் தோன்றினாலும் அதுதான் சரியான முடிவாகவும் மனதில் படுகிறது.


ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து படத்திற்குப் பிறகு சேரன் தனக்கென உருவாக்கி நடித்திருக்கும் லெனின் கதாபாத்திரத்திற்கு அழகாக உயிர் கொடுத்திருக்கிறார்.


நதீராவாகத்தான் தெரிகிறார் பத்மப்ரியா. அவருடைய கண்கள் அதிகம் பேசுகின்றன.


விஜயகுமார், இளவரசு, ஆர்யன் ராஜேஷ் இப்படி ஒரு சில கதாபாத்திரங்களே நடித்திருந்தாலும், அனைவரின் பங்களிப்பும் சரியாக அமைந்துள்ளது.


சபேஷ் முரளியின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு உயிரோடத்தைக் கொடுத்திருக்கின்றன. நிலா, பாட்டு திரும்பத் திரும்ப கேட்க வைக்கும்.


ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு, வைரபாலனின் கலையும், படத்தின் கால ஓட்டங்களுக்கு தக்கபடி பயணிக்க வைக்கின்றன.


நல்ல படங்களை ரசிக்கும் தமிழக மக்கள் நிச்சயம் இந்த படத்தையும் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக மாற்றுவார்கள் என நம்பலாம்.


வியாழன், 13 ஆகஸ்ட், 2009

ஸ்ரீதேவிக்கு இன்று பிறந்த நாள்




தமிழ் ரசிகர்கள் ஸ்ரீதேவியை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட மாட்டார்கள். எழுபதுகளின் கடைசியிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும், இந்திக்கு செல்லும் வரை தமிழ் திரையுலகில் கனவுக்கன்னியாக பவனி வந்தவர். சிவாஜி, கமல், ரஜினி என பெரிய ஹீரோக்களோடு மட்டுமல்லாமல் சிறிய ஹீரோக்களோடும் நடித்து பெரும் புகழ் ஈட்டியவர். இந்திக்குச் சென்றதும் ஏனோ அவர் தமிழ் ரசிகர்களையும் தமிழ் சினிமாவையும் மறந்து விட்டாலும், நாம் அவரை இன்னும் மறக்காமல்தான் இருக்கிறோம்.




1967ல் வெளிவந்த கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும நம்பர் 1 இடத்தில் பல வருடங்களாக கோலோச்சியவர்.1976ல் கே பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த மூன்று முடிச்சு அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து கமலுடன், குரு, சங்கர்லால், சிகப்பு ரோஜாக்கள், தாயில்லாமல் நானில்லை, மீண்டும் கோகிலா, வாழ்வே மாயம், வறுமையின் நிறம் சிவப்பு, நீலமலர்கள், மூன்றாம் பிறை, 16வயதினிலே ஆகிய படங்களிலும் ரஜினியுடன், தர்மயுத்தம், ப்ரியா, போக்கிரிராஜா, தனிக்காட்டு ராஜா, அடுத்த வாரிசு, நான் அடிமை இல்லை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவற்றில் பல படங்கள் வெற்றிப் படங்களே.




தெலுங்கில் என்டிஆர், ஏஎன்ஆர், கிருஷ்ணா, சிரஞ்சீவி, வெங்கடேஷ், போன்றோருடனும், பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார்.




இந்தியில் இவருடைய வெற்றிப் படங்களுக்கு கணக்கேயில்லை. பல வருடங்களாக தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் இருந்து சாதனை படைத்தவர்.பல பில்ம்பேர் விருதுகளையும், ஆந்திர, தமிழக அரசு விருதுகளையும், வென்றவர்.




மூன்றாம் பிறை படத்தில் தேசிய விருதை தட்டிச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டவர்.




100 படங்களுக்கும் மேல் நடித்த பெருமை இவருக்கு உண்டு.




அந்த பேரழகிக்கு ஆகஸ்ட் 13 இன்று பிறந்த நாள்.

சுதந்திர தினத்துக்கு ஒரே ஒரு படம்தான்


தீபாவளி, பொங்கல், வருடப் பிறப்பு, சுதந்திர தினம் இவைதான் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாட்கள். இந்த நாட்களில் எப்படியும் குறைந்தது ஐந்து படங்களாவது வெளிவரும். ஆனால் இந்த சுதந்திர தினத்தன்று ஒரே ஒரு படம்தான் வெளி வர இருக்கிறது. அதுவும் ஒரு நாள் முன்னதாகவே வெளியாகிறது. சேரன் இயக்கி நடித்திருக்கும் பொக்கிஷம் படம்தான் அது. கந்தசாமியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது அடுத்த வாரமோ அல்லது அதற்கடுத்த வாரமோ வெளியாகும் எனத் தெரிகிறது. ஐந்து படங்களாவது வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டு வெறும் ஒரே ஒரு படம் மட்டுமே வெளிவருவது தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமான விஷயமல்ல. சென்ற மாதத்தில் வெளிவந்த படங்களில் எதுவுமே வெற்றிப்படங்களாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. டிடிஎஸ், க்யூப், டிஐ இப்படி எத்தனையோ தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட பிறகு, திரைப்படத்தின் வெற்றி என்பது அதல பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம் என உடனடியாக கண்டு பிடித்து அந்த குறையை அகற்றினால்தான் தமிழ் சினிமா மேலும் வளர வழி பிறக்கும். இல்லையேல் திரைப்படங்களை இனி தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்க்க இயலுமோ என அச்சப்பட வேண்டியிருக்கிறது.


ஒரு படத்தயாரிப்பு செலவும் கோடிகளைத் தாண்டி பத்து கோடி வரையில் செல்வதும இதற்கு ஒரு காரணமாக அமையலாம். அல்லது நூறு ரூபாய்க்கு மேல் டிக்கெட் வாங்கி படம் பார்ப்பதும் காரணமாக இருக்கலாம். ஒன்று செலவுகளைக் குறைக்க வேண்டும், அல்லது கட்டணங்களை குறைக்க வேண்டும, நடிகர்களும் சம்பளத்தைக் குறைக்க வேண்டும்.இப்படி நாம் என்ன வேண்டுமானாலும் யோசனைகளைச் சொல்லலாம்.


ஆனால் நல்ல கதையுடன் தரமான படம் வந்தால் அது தானாகவே வெற்றி பெற்று விடும் என்பதை மறந்து விடக்கூடாது, மறுக்கவும் கூடாது.


திங்கள், 10 ஆகஸ்ட், 2009

என்றென்றும் இனியவை - 1

நாமெல்லாம் ஒரே சினிமா பாட்டு பைத்தியம்னு சொல்லலாம். அதுலயும் 70கள்லயும் 80கள்லயும் வந்த பாட்டுன்னா அப்படி ஒரு பைத்தியம். சில பாடல்கள் என்ன படம் ஏதுன்னு கூட தெரியாது, ஆனால் பாட்டுலாம் அப்படியே ஞாபகம் இருக்கும்.

அந்த விதத்துல எனக்கு சின்ன வயசுல தூர்தர்ஷன்ல, ஒளியும் ஒளியும் நிகழ்சசியில அடிக்கடி போடப்பட்ட பாட்டு, மல்லிகை மோகினி படத்துல இருந்து, எஸ்பிபி பாடினதுன்னு நினைக்கிறேன்.

மேகங்களே, இங்கு வாருங்களேன்
என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள்
ஆத்மாவின் தாகங்கள், யாரென்று சொல்லுங்கள்....

என்ற பாடல் அப்படியே மனதில் பதிந்த ஒன்று. இப்போது கூட ஏதோ ஒரு வேலையாக இருக்கும் போது அந்த பாடல் வடிவம் கண்ணுக்குள் தோன்றி மறையும்.

வெள்ளை ஜிப்பா போட்டுக் கொண்டு நாயகன், ஒரு விரக்தியில் பாடும் பாடல் அது- இடையிடையே பாம்பு வேறு வந்து போகும். இன்றைய தொலைக்காட்சிகளிலும், மியூசிக் சேனல்களிலும் இந்த பாடலை இதுவரை பார்த்ததே கிடையாது.

பதிவில் எழுதப் போகிறோம். சரி யார் நடிகர், இயக்குனர் என அலசிப் பார்த்தேன்.

அந்த படம் வெளிவந்த ஆண்டு, 1979. இயக்கம் - துரை, இசை - ஜிகே வெங்கடேஷ், நடிகர்கள் விக்ரம் ( இவர் வேறு, கந்தசாமி விக்ரம் அல்ல), லதா.

இந்த என்றென்றும் இனியவை, தொடரும்......

கருத்துக்களை வரவேற்கிறேன், அப்படியே கொஞ்சம் ஓட்டு போடுங்கன்னா, மறந்துடாம...நன்றி.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

பிளாக்கை சரி செய்ய உதவி வேண்டும்

என்னுடைய பிளாக்கின் ஹோம் பேஜ் ன் மேல் புறம் ஒரு இடைவெளி வருகிறது. அதை சரி செய்ய என்ன வழி. யாராவது உதவி செய்தால் நலமாக இருக்கும்

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

தொலைந்து போன நண்பர்கள்

அனைவருக்கும் நணப்கர்கள் தின நல்வாழ்த்துக்கள்.

நண்பர்கள் என்றவுடனே எனக்கு தொலைந்து போன என் நண்பர்களைப் பற்றித்தான் ஞாபகம் வருகிறது. இன்றைய தலைமுறைக்குப் பிரச்சனையில்லை சிறு வயது முதலே, தொலைபேசி, கைபேசி, ஈமெயில், என பல விதங்களில் தொடர்புப் படுத்திக் கொள்ள வழி இருக்கிறது. ஆனால் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இதெல்லாம் கிடையாது.

எனக்கு ஞாபகம் உள்ள வரையில் என்னுடன் ஐந்தாவது வரை படித்த இரு நண்பர்களைப் பற்றி எப்போதுமே மறக்க முடியாது. ஒருவன் விஜயசங்கர், செங்கல்பட்டு அருகிலுள்ள, சிங்கபெருமாள் கோவிலைச் சேர்ந்தவன், இன்னொருவன் குணசேகர், செங்கல்பட்டைச் சேர்ந்தவன். இவன் இறந்து விட்டதாக பல வருடங்கள் கழித்து தகவல் வந்தது. ஐந்தாவது வகுப்பு வரை நான், விஜயசங்கர், குணசேகர் மூவரும்தான் ஒன்றாக அமர்ந்திருப்போம். என்ன வாங்கி சாப்பிட்டாலும் ஒன்றாகத்தான் சாப்பிடுவோம். அதிகமாக செலவு செய்தது குணசேகராகத்தான் இருக்கும். இவன் இறந்து விட்டான் என்று கேள்விப்பட்ட போது மிகவும் வருத்தமடைந்தேன். விஜயசங்கர் இப்போது எங்கிருக்கிறான் என்றே தெரியாது.

அடுத்து ஆறாவது வகுப்பு முதல் எட்டாவது வகுப்பு வரை ஒரு பள்ளியில் படித்த போது எட்டாவது வகுப்பில் சுரேந்திரன் என்ற நண்பன் கிடைத்தான். எனக்கும் அவனுக்கும் எப்போதுமே போட்டி இருக்கும். படிப்பு, விளையாட்டு, மற்ற விஷயங்கள் என நானும் அவனும் போட்டி போட்டுக் கொண்டே இருப்போம். ஒரு ஆண்டு விழாவில் அவன் பாட இருப்பதைக் கேள்விப்பட்டு நானும் பாட (?) ஆசைப்பட்டு ஒரு பாடலையும் பாடினேன், முதல் முதல் ராக தீபம் ஏற்றும் நேரம்...பாடல் அது. இன்றும் அந்த பாடலை முழுவதுமாகப் பாடுவேன். ஒன்பதாவது வந்த போது அவன் திருக்கழுக்குன்றம் சென்று விட்டதாகத் தகவல். அதன் பின் இரண்டு வருடம் கழித்து பத்தாவது முடித்த பின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அவனை சந்தித்தேன். அதன் பின் அவன் எங்கிருக்கிறான் என்றே தெரியாது.

பள்ளி இறுதியில் படித்த பல நண்பர்களைப் பற்றிய தகவல் கிடையாது, இன்னும் ஏன் கல்லூரியில் உடன் படித்தவர்களில் ஒரு சிலர்தான் தொடர்பில் இருக்கிறார்கள். மற்றவர்களை பார்த்தே பல வருடங்கள் ஆகி விட்டது.

திடீரென கடந்த அனைத்தையும் நினைத்துப் பார்ப்பேன், அந்த மறக்க முடியாத நாட்களில் வாழ்ந்த விதமே தனி. சைக்கி்ளில் ஒன்றாகச் செல்வது, கிரிக்கெட் விளையாடியது, கோவில்களில் சுற்றியது, தெருக்களில் விளையாடியது, போன்றவை இன்னும் நெ்ஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கிறது.

இன்றைய தலைமுறை நண்பர்களைப் பார்த்தால் பொறாமைதான் வருகிறது. இந்த ஈமெயில், கைபேசி எல்லாம் நாங்கள் சிறுவர்களாக இருந்த போது வந்திருக்கக் கூடாதா என்று ?

இவை வந்த பின்னும் நண்பர்களைப் பிரிந்திருந்தால், அது நட்பே கிடையாது.

புதன், 15 ஜூலை, 2009

அச்சமுண்டு அச்சமுண்டு - விமர்சனம்


படத்தோட ஸ்டில்சும் , படத்தைப் பத்தின டிரைலரும், விளம்பரமும், அதோட டைட்டில்ல இருந்து எல்லாமே கொஞ்சம் அச்சப்பட (அதாவது பயப்பட) வச்சாலும், பயமில்லாம படத்தைப் பார்த்துட்டு வரலாம்.


அமெரிக்கா , நியூ ஜெர்சியில இருக்கிற அழகான குடும்பமான பிரசன்னா, சினேகா தம்பதியர் வீட்டுல நடக்கிற விஷயங்கள்தான் படத்தோட கதை. இன்னும் விரிவா சொன்னால் நல்லா இருக்காது. சொல்ல வந்த விஷயத்தை , பாடல்கள், தேவையில்லாத காட்சிகள், சண்டைகள், நகைச்சுவைங்கற பெயர்ல கடிகள்னு இல்லாம தெளிவா கொடுத்திருக்காரு அறிமுக இயக்குனர் அருண் வைத்தியநாதன்.


பிரசன்னா, சினேகா ஜோடி ரொம்ப பொருத்தமா இருக்கு. இரண்டு பேருமே அழகா இருக்காங்க, அழகாவும் நடிச்சிருக்காங்க. ஒரு வீடு, ஆபிஸ் இங்க மட்டுமே நடக்கிற கதைதான், கொஞ்சம் சுவாரசியத்தை குறைச்சிடுது. இருந்தாலும் வழக்கமான தமிழ் சினிமா பார்க்கிற பீலிங் இல்லாம இருக்கு. அதுக்கு அமெரிக்காவுல கதை நடக்கிறதும் காரணமா இருக்கலாம்.


அங்கங்க சின்ன சின்ன பாடல்கள் வருது. கார்த்திக்ராஜா இசை அருமையாவே இருக்கு. ரெட் (அஜித் காமிரா இல்லீங்க ? ) காமிராவுல ஷுட் பண்ணி வந்திருக்கிற முதல் தமிழ் படம்.


படத்தோட கடைசியில சொல்ற தகவலைப் பார்த்தால் ஆச்சரியமாவும், அதிர்ச்சியாவும் இருக்கு. எது எதுலயோ முதல் இடத்துல இருக்கணும்னு நினைக்கிறோம். ஆனால் அதுல முதல் இடமா ? பயமாத்தான் இருக்கு.


எந்த எதிர்பார்ப்பும் இல்லாம போனால் படத்தை ரசிக்கலாம்.

சனி, 11 ஜூலை, 2009

இந்திர விழா, வாமனன், வைகை - குறைவான விமர்சனம், குறையான விமர்சனம் அல்ல
































இந்திர விழா

கதைன்னு சொல்லிக்க பெருசா ஒன்னும் இல்ல. டிவி சேனல்ல ஹெட்டா இருக்கிற ஸ்ரீகாந்துக்கும் அந்த சேனல் ஓனர் மனைவி நமீதாவுக்கும் இடையே நடக்குற சண்டைதான் படத்தோட கதை.

நமீதா அடிக்கடி நீச்சல் உடையில வந்து அசத்தறாங்க

படத்துல பாட்டுலாம் வருது... ஆனால்....

விவேக்கும் இருக்காரு படத்துல....ஆனால்....சிரிப்புத்தான் வரல.....

வாமனன்

சினிமாவுல நடிக்கிற ஆசையில சென்னைக்கு வர்ற ஜெய், தேவையில்லாம ஒரு பெரிய சிக்கல்ல மாட்டிக்கிறாரு, அதுல இருந்து எப்படி தப்பிக்கிறாருங்கறதுதான் படத்தோட கதை.

தனி ஹீரோவா நடிக்க ட்ரை பண்ற ஜெய் கதையை எப்படி செலக்ட் பண்றதுன்னு கத்துக்கணும். அப்படிதான் ஜெய் ஜெயமாக முடியும்.

லக்ஷ்மி ராய் மாடலிங் நடிகையா வர்றாங்க. பளபளன்னு நீச்சல் உடையில வந்து பார்க்க(?) வைக்கறாங்க.

சந்தானம்தான் படத்தை கொஞ்சம் காப்பாத்தறாரு.

யுவன் இசையாம். சொன்னால்தான் தெரியுது..யுவன் எங்கே உங்க இனிமையான இசை...என்ன ஆச்சி....

வைகை

காதலும் காதல் சார்ந்த இடமும்னு டைட்டில்ல கூடவே வருது.

மதுரை பக்கம் போயி கொஞ்சம் விசாரிச்சால் தமிழ் சினிமாவுக்கு நல்ல நல்ல கதைகள்லாம் கிடைக்கும் போல இருக்குது. கிளைமாக்ஸ்லதான் காட்டறாங்க உண்மைக்கதைன்னு...இன்னும் கொஞ்சம் உருக வச்சிருக்கலாம்.

மற்றபடி படத்துல உண்மையிலேயே யதார்த்தம் நல்லா இருக்கு. ரகசியா பாட்டைத் தவிர.

புதுமுகங்கள்தான் ஹீரோ, ஹீரோயின், ரெண்டு பேருமே குறை வைக்காம நடிச்சிருக்காங்க.

ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாட்டை, ரீமிக்ஸ் பண்ணி கெடுக்காம அதே டியூனோட வேற பாடகர்களை வச்சி பாட வச்சிருக்காங்க.

வைகை , வாகை சூட வாய்ப்பிருக்கு. மற்றபடி இந்திர விழாவுக்கு விழா எடுக்க முடியுமான்னு தெரியல. வாமனன், வாடிப்போயிருக்காரு.







சனி, 27 ஜூன், 2009

நாடோடிகள் - * நச் * என்று ஒரு திரைப்படம்




ச என்ற எழுத்தை ஷ வாகவும் உலகத்தரத்தில் ரத்தினமான படங்களைக் கொடுப்பது தாங்கள்தான் எனவும் மார் தட்டிக் கொள்ளும் இயக்குனர்கள், தயவு செய்து இந்த படத்தைப் பார்க்க வேண்டும். சூப்பர்ஸ்டார்களும், சூப்பர் ஆக்டர்களும், பல இளைய, புரட்சித் தளபதிகளும் எப்படிப்பட்ட படங்களில் நடிக்க வேண்டும் என இந்த படத்தைப் பார்த்து கற்றுக் கொள்ளட்டும்.


திரைப்படம் என்பது வாழ்வியலை ஒட்டி அமைய வேண்டும். பல புகழ் பெற்ற படங்களின் பின்னணி நம் வாழ்வில் நிச்சயம் நடந்திருக்கும். இந்த படத்தைப் பார்க்கும் போது, படம் என்பது நமக்குத் தோன்றவே தோன்றாது.


படத்தின் ஆரம்பத்திலேயே , என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன், என சொல்லி கைதட்டல் வாங்கி விடுகிறார் இயக்குனர் சமுத்திரக்கனி. நட்பும் , காதலும் இல்லாத வாழ்ககை ஒரு வாழ்க்கையே இல்லை. பாசம் கூட சிலருக்குக் கிடைக்காமல் போகலாம், ஆனால் இவையிரண்டும் கண்டிப்பாக கிடைத்திருக்கும். நட்பும், காதலுமே பிரிந்து கூடப் போயிருக்கும். ஆனால் அவற்றை நமக்கு பிடிக்காது என்று சொல்லிவிட முடியாது.


அப்படிப்பட்ட உன்னதமான உணர்வை மிகவும் அழகாகக் கையாண்டிருக்கிறார் இயக்குனர். நண்பனின் நண்பனுக்கு வந்த காதலுக்காக தங்கள் வாழ்க்கையை தொலைத்தவர்களைப் பற்றிய கதை. நண்பர்களாக சசிகுமார், பரணி, விஜய் மூவருமே அந்த கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள். ஆரம்பம் முதலே அவர்களில் ஒருவராக நாமும் ஆகிவிட்டதைப் போன்ற ஒரு உணர்வு.


நண்பர்களின் காதலை சேர்த்து வைக்கப் போராடியவர்களின் கதைகளைத்தான் இத்தனை காலமாக பார்த்துக் கொண்டு வருகிறோம். முதல் முறையாக, திருமணத்திற்குப் பின் அந்த காதலர்கள் என்ன ஆனார்கள் என்பதை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

சசிக்கும் அவருடைய முறைப்பெண்ணான அனன்யாவுக்கும் இடையே இருக்கும் காதல், விஜய்க்கும் சசியின் தங்கையான அபிநயாவுக்கும் இடையே இருக்கும் காதல் என , சசி நண்பனின் கெட்ட காதலுக்கு இடையே, இவர்களின் நல்ல காதலும் படத்தில் உண்டு.

சசிகுமார் சுப்ரமணியபுரம் படத்திற்குப் பிறகு, மீண்டும் ஒரு தரமான படத்தில் தன்னுடைய பெயரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். சசி அவர்களே நல்ல சினிமா பக்கமே இருங்கள், தப்பித் தவறி மசாலா சினிமா பக்கம் சேர்ந்து விடாதீர்கள், என் தாழ்மையான வேண்டுகோள்.

புதுமுகங்கள் அனன்யா, அபிநயா இருவருமே அசத்திட்டாங்கய்யா. அபிநயா வாய்பேச முடியாத, காது கேளாதவர் . இவையிருந்தும் நடிக்கத் தெரியாத நடிகைகளுக்கு மத்தியில் இவரின் நடிப்பு அவர்களுக்கு பாடமாக அமையட்டும்.

இசை சுந்தர் சி பாபு. வாளமீனுக்கும், கத்தாழக் கண்ணால புகழுக்கும் சொந்தக்காரர். இந்த படத்தில் இசை ராஜ்ஜியமே நடத்தியிருக்கிறார். ஆனால் விட்ட குறை தொட்ட குறை போலிருக்கிறது, யக்கா யக்கா என ஒரு பாடலை போட்டிருக்கிறார். ஆனால் ஜகடம் ஜகடம் பாடல் தியேட்டரையே உலுக்குகிறது.


கல்லூரி படத்தில் நடித்த பரணி, சென்னை-28 படத்தில் நடித்த விஜய், கஞ்சா கருப்பு இவர்களுக்கும் இந்த படம் பேரைக் கொடுக்கும். வழக்கமான தமிழ் சினிமா வில்லன்களாக ஜெயப்பிரகாஷ், மற்றொரு பெண்மணி (பேர் தெரியவில்லை) .


நமோ நாராயணன் என ஒரு அறிமுக நடிகர். டிஜிட்டல் பேனரை வைத்து இவர் அடிக்கும் லூட்டிக்கு தியேட்டரில் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் தரம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த படம் ஒரு சாட்சி. இப்படி வருடத்திற்கு நான்கைந்து படங்கள் வந்தாலே போதும். மூடப்பட்ட திரையரங்குகள் கூட மீண்டும் புத்துயிர் பெற்று விடும்.




வெள்ளி, 26 ஜூன், 2009

வால்மீகி விமர்சனம்

அல்லாருக்கும் வணக்கம் அண்ணாத்த, இன்னைக்கு ரெண்டு படம் ரிலீசு. நாடோடிகள், வால்மீகி. ஆனா, நா மொதல்ல பாத்தது வால்மீகி.
பேப்பர்ல வௌம்பரத்தலாம் பார்த்து மிரசலாயி சும்மா அஸத்த போறாங்கன்னு பார்த்தா, ராமாயணத்த எழுதன வால்மீகி பேர வச்சிட்டு, நம்ம கதைய கொடுத்திருக்காங்கப்பா.
அது ஒண்ணுமில்ல, ஒரே வரில சொல்லிடலாம்பா படத்தோட கதைய. ஒரு பிக்பாக்கெட் திருடன, ஒரு பொண்ணு திருத்த நினைக்கிறா, இதாம்ப படத்தோட கதையே. படம் பாக்கச் சொல்ல தேவையில்லாம இந்த ஆனந்த விகடன் எல்லா படத்துக்கும் மார்க்கு போடுவாங்களே, அது ஞாபகம் வந்துச்சுப்பா. அப்பதான் புரின்ச்சி. மார்க் போடுறது ஈஸி. படிக்கிறது கஷ்டம்பா. (அதாவது படம் எடுக்கிறது). படத்தோட டைரக்டரு, நம்ம சிவாஜி ஷங்கர் கிட்ட தொழில் கத்துக்கனவராம்பா. அவராட்டம் மிரசலா எடுக்கத் தெரியலப்பா. நல்லாத்தான் கதைய யோசிச்சிருககாரு, ஆனால் பெண்டான வீல் கணக்கா திரைக்கதை போயிடுச்சிப்பா.

படத்தோட ஹீரோ பேரு அகில். கல்லூரி படத்துல அறிமுகமானரே அவரு. பாண்டி கேரக்டர்ல கரீட்டாதான் நடிச்சிருக்காருப்பா. அச்சு அசல் லோக்கல் பிக்பாக்கெட் மாதிரியே கீறாரு. அதுக்கே நூத்துக்கு எண்பது மார்க் போட்டுடலாம்பா.
ஹீரோயினியா ரெண்டு பேரு, படம் பாக்கும் போதுதான் பேர கேட்டுக்குட்டன்பா. ஒரு பொண்ணு மீரா நந்தன். இன்னொரு பொண்ணு தேவிகா. இவங்களை பாக்கச் சொல்ல நம்ம உஷா அக்கா(சிம்பு அம்மா, அண்ணன் டிஆர் சம்சாரம்) சினிமால ஹீரோயினா நடிக்கும் போது எப்படி இருந்தாங்களோ அப்படி கீறாங்கப்பா. மீரா நந்தன், கேரக்டர பாக்கும் போது சிரிப்பா வருதுப்பா. நம்ம தமிழ் சினிமால படிச்ச பொண்ணுங்களுக்குலாம் காதலிக்கிறதுக்கு நல்ல பையனே கிடைக்கிறதில்லப்பா. ஒண்ணு பொறுக்கிய காதலிக்கிறாங்க, இல்ல திருடன காதலிக்கிறாங்க, இல்ல பிக்பாக்கெட்ட காதலிக்கிறாங்க. படிச்ச கம்ப்யூட்டர் இஞ்சினியர் யாருமே கிடைக்க மாட்ங்கிறாங்கப்பா. ரெண்டு பேர பத்தியும் என்னாத்த சொல்றது.
நம்ம ராஜா, என்னடா பாண்டி பாட்ட தமாசா பாடியிருக்காருப்பா.
படத்துல காமெடி இல்ல, பைட்டு இல்ல, மேட்டர் பாட்டு இல்ல, பார்க்க அழகா யாரும் இல்ல, இப்படி எத்தனையோ இல்ல.....

புதிய பாதை போட நினைச்சி பழைய பாதையை போட்டுட்டாங்கப்பா.

விகடன்தான் எல்லாருக்கும் மார்க்கு போடுவாங்க, இப்ப நம்ம டேர்ன், நாம எல்லாரும் மார்க் போடுவோம்பா...


என் மார்க் 3௦0/100


பின்குறிப்பு- படம் முழுக்க சென்னைத் தமிழ் என்பதால், ஒரு வித்தியாசத்துக்கு நானும் சென்னைத் தமிழிலேயே எழுதிவிட்டேன். புரியாதவர்கள் மன்னிக்கவும்.

ஞாயிறு, 21 ஜூன், 2009

தமிலிஷில் என்ன நடக்கிறது

இன்று என்னுடைய புதிய இடுகையை பதிவு செய்து விட்டு அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தேன். ஆனால் தமிலிஷில் என்னுடைய இடுகை, தொடரும் இடுகைகள் பகுதியில் வரவேயில்லை. ஏன் இந்த தாமதம் எனத் தெரியவில்லை. அது புரியாமல்தான், அதற்கும் ஒரு இடுகையை போடுகிறேன். தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.

நாளை அறிவிப்பாரா இளைய தளபதி விஜய் ?


எதிர்காலத்தில் அரசியலில் குதிப்பேன் என்று தெரிந்துதுன் இளைய தளபதி என்ற பட்டப்பெயரை தன்னுடன் விஜய் இணைத்துக் கொண்டார் என்று தெரிகிறது. கடந்த ஒரு வார காலமாக விஜய் அரசியலில் குதிப்பாரா என மீடியாக்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டு வரும் வேளையில் விஜய் அவருடைய பிறந்த நாளை, நாளை கொண்டாட இருக்கிறார். இதற்காக சில விழாக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மருத்துவ முகாம், கம்ப்யூட்டர் பயிற்சிப் பள்ளி திறப்பு விழா என அரசியலுக்கு முன்னோட்டமாக நடை பெற உள்ளதாக தகவல். அது மட்டுமல்ல நாளை மீடியாவை விஜய் சந்தித்து பேசவும் உள்ளார். அப்போது கண்டிப்பாக நம் நிருபர்கள் அரசியல் கேள்விகளைத்தான் அதிகம் கேட்பார்கள் என எதிர்பார்க்கலாம். இதில் விஜய் ஒரு தெளிவான பதிலைத் தெரிவிப்பார் என நம்பலாம். எம்ஜிஆர் பெயரை படங்களுக்கு வைக்க ஆரம்பித்ததன் உள்நோக்கம் இப்போதுதான் புரிகிறது. வேட்டைக்காரனைத் தொடர்ந்து, உரிமைக் குரல் என அவருடைய அடுத்த படத்திற்கு தலைப்பாக தேர்வு செய்திருக்கிறார் என கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயகாந்த்தைத் தொடர்ந்து விஜய் அரசியலுக்கு வருவதால் என்ன நடக்கும் என போகப் போகத்தான் தெரியும். சூப்பர் ஸ்டாரே அரசியலுக்கு வர தயங்கும் போது விஜய்யின் அரசியல் பிரேவேசம் எப்படியிருக்கும் எனத் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். விஜய்யின் அரசியல் விஜயம், ஜெயத்தில் முடியுமா என்று ?

வியாழன், 18 ஜூன், 2009

நமீதா - அறிமுகம்







நிஜப் பெயர் - நமீதா கபூர்

மற்றொரு பெயர் - பைரவி

பிறந்த தேதி - மே 10, 1980

ஊர் - சூரத், குஜராத்

முதல் படம் - சொந்தம் (தெலுங்கு) - 2002

முதல் தமிழ்ப்படம் - எங்கள் அண்ணா (2003)

இதுவரை நடித்துள்ள படங்கள்

சொந்தம், ஜெமினி, ஒகே ராஜு ஒகே ராணி, ஒக ராதா இதரு கிருஷ்ணலு பெல்லி, அய்தே ஏன்டி, நயாகடு, பில்லா - தெலுங்கு

எங்கள் அண்ணா, ஏய், சாணக்யா, பம்பரக்கண்ணாலே, ஆணை, கோவை பிரதர்ஸ், பச்சக்குதிர, தகப்பன்சாமி, நீ வேணுண்டா செல்லம், வியாபாரி, நான் அவனில்லை, அழகிய தமிழ்மகன், பில்லா, சண்ட, பாண்டி, பெருமாள், தீ, 1977,

லவ் கே சக்கர் மெய்ன் - ஹிந்தி, நீலகண்டா, இந்திரா - கன்னடம்,

இந்திரவிழா - விரைவில்

ஜகன்மோகினி, பிளாக்ஸ்டேஷன், தேசத்துரோகி - படப்பிடிப்பில்

ஜோடியாக நடித்துள்ளவர்கள்

விஜயகாந்த், சரத்குமார், அர்ஜுன், ஸ்ரீகாந்த், விஜய், அஜித், சத்யராஜ், பிரசாந்த், பார்த்திபன், ஜித்தன் ரமேஷ், எஸ்ஜே சூர்யா, ஜீவன், ராகவாலாரன்ஸ், சுந்தர் சி,


சாதனை
கூகுள் ஹிட்ஸ் (இப்ப நம்ம ஹிட்ஸ் ஏறுமா ??? )


புதன், 17 ஜூன், 2009

நயன்தாரா - ஒரு அறிமுகம்







நிஜப் பெயர்
டயானா மரியம் குரியன்
பிறந்த தேதி
நவம்பர் 18, 1984

சொந்த ஊர்
திருவல்லா, பத்தனம்திட்டா, கேரளா
படிப்பு
பி.ஏ., இங்கிலீஷ் லிட்ரேச்சர்

அறிமுகமான படம்
மனசினக்கரே (மலையாளம்) வருடம் 2003

மோகன்லாலுடன் நடித்த படம்
நாட்டுராஜாவு

மம்முட்டியுடன் நடித்த படம்
தஸ்கரவீரன்

தமிழில் அறிமுகம்
ஐயா - வருடம் 2004

இதுவரை நடித்துள்ள படங்கள்
மனசினக்கரே, விஸ்மயதும்பத்து, நாட்டுராஜாவு, தஸ்கரவீரன், ராப்பகல், 20/20, பாடிகார்ட் - மலையாளம்
ஐயா, சந்திரமுகி, கஜினி, சிவகாசி, கள்வனின் காதலி, வல்லவன், தலைமகன், ஈ, பில்லா, யாரடி நீ மோகினி, குசேலன், சத்யம், ஏகன், வில்லு, ஆதவன் - தமிழ்
லக்ஷ்மி, பாஸ், யோகி, துபாய் சீனு, துளசி, கதாநாயகடு, சத்யம், அதுர்ஸ், ஆஞ்சநேயலு - தெலுங்கு

ஜோடியாக நடித்தவர்கள்
ஜெயராம், மம்முட்டி, மோகன்லால்
சரத்குமார், ரஜினிகாந்த், சூர்யா, விஜய், எஸ்ஜே சூர்யா, சிம்பு, ஜீவா, அஜித், தனுஷ், விஷால்,
வெங்கடேஷ், நாகார்ஜுனா, பிரபாஸ்,ரவிதேஜா

அடுத்து வர இருக்கும் படம்
கேஎஸ் ரவிகுமார் இயக்கத்தில் சூர்யாவுடன் நடிக்கும் ஆதவன்












செவ்வாய், 16 ஜூன், 2009

இதுதான் கலாச்சாரமா ?







திரைப்பட விழாக்களில் நம் நடிகைகள் அணிந்து வரும் ஆடைகளைப் பார்க்கும் போது, நம் கலாச்சாரம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறது. சமீப காலமாக அவர்கள் அணிந்து வரும் ஆடைகளைப் பார்த்தால் ஆஆஆஆஆவெனப் (பார்க்கத் தூண்டுகிறது) என நினைக்க வேண்டாம், ஆ வென ஆத்திரப்பட வைக்கிறது. அவரவர் வீட்டுக்குள் எப்படி வேண்டுமானால் இருந்து விட்டுப் போகட்டும். பொது இடங்களில் விழாக்களுக்கு வரும் போது குறையில்லாத நிறைவான உடை அணிந்து வந்தால் என்ன ? தங்களை பலர் பார்க்க வேண்டும் என்பதற்காக இப்படி வருகிறார்களா, அல்லது தாங்களும் அழகுதான் என காட்டிக் கொள்வதற்காக வருகிறார்களா எனத் தெரியவில்லை. குறிப்பாக வட இந்திய நடிகைகள்தான் இப்படி வருகிறார்கள் என்று பார்த்தால் நம்ம ஊர் நடிகைகள் கூடி புடவையிலும் கவர்ச்சியாக வருகிறார்கள்.
புகைப்படக் கலைஞர்களுக்கு நடிகைகள் இப்படி வருவதுதான் ஒரு கொண்டாட்டமே(?) . அப்போது நடக்கும் தள்ளு முள்ளுகளை நீங்கள் பார்க்க வேண்டுமே. அப்படிப்பட்ட படங்களைத்தான் நம்மவர்களும் விரும்பிப் பார்ப்பார்கள் என சொல்லப்படுவது ஒரு காரணம்தான்.
அரை குறை ஆடையைப் பற்றி எழுதி விட்டு, புகைப்படத்தையும் வெளியிட்டது நியாயமா என நீங்கள் கேட்டால், உங்களின் ஓட்டுக்களின் படி நான் அதை பிறகு நீக்கி விடுகிறேன். பின்னூட்டத்தில் உங்கள் கருக்துக்களை வெளியிடுங்கள். அப்படியே கருத்துக் கணிப்பிலும் உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள்.

திங்கள், 15 ஜூன், 2009

தோனி செய்தது நியாயமா ?

நேற்றைய டி௨0 மேட்ச்சில் இந்தியா தோற்றது என்னை மிகவும் பாதிப்படைய வைத்து விட்டது. முதல் டி௨0 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு அரை இறுதியில் ஆடக்கூட முடியாமல் போனது துரதிர்ஷ்டவசம் என சொல்ல முடியாது. தெரிந்தே செய்த தவறுதான் என்று சொல்ல வேண்டும். அதிலும் சமீப காலமாக, சில வருடங்களாக எட்டிப் பார்க்காத அரசியல் இந்திய அணியில் எட்டிப் பார்க்க ஆரம்பித்து விட்டது. சில இன்னிங்சில் சிறப்பாக ஆடினார் என்பதற்காக சேவாக், யுவராஜ் போன்ற சீனியர்களை எல்லாம் ஓரம் கட்டி விட்டு தோனியை கேப்டான ஆக்கியது மிகப் பெரும் தவறு. சிறந்த வீரர்களான அவர்களுக்கு தோனி எப்படிப்பட்ட மரியாதையைக் கொடுக்கிறார் என்பது இப்போது சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறது. அதிலும் சேவாக்கை காயம் காரணமாக அணியை விட்டு திடீரென நீக்கியதும் மாபெரும தவறு. அதை மறைப்பதற்காக தோல்விக்கு பின்னர் அளித்த பேட்டியில் சேவாக் இல்லாததும் ஒரு காரணம் என சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் ஆடிய பதினோரு வீரர்கள் என்ன ஆடினார்கள்.

இந்தியாவைப் பொருத்தவரையில் வெற்றியடைந்தால் தூக்கிக் கொண்டாடுவதும், தோல்வியடைந்தால் தூற்றுவதும் வாடிக்கையான ஒன்றுதான். ஐபிஎல் போட்டிகளிலேயே இந்திய வீரர்கள் யாரும் சிறப்பாக ஆடவில்லை, ஆர்பி சிங்கைத் தவிர. ஒரு உலகக் போப்பை போட்டிக்கு முன்பாக நீண்ட நாட்கள் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை நடத்தியதே ஒரு மாபெரும் தவறு. பார்மில் இல்லாத வீரர்களுடன், ஐபிஎல் ஆடி களைப்படைந்த வீரர்களுடன் ஒரு உலகக் கோப்பை போட்டியில் பங்கு பெற்றதும் தவறான ஒன்றாகும். உலகக் போப்பையையும், தேர்தலையும் காரணமாக வைத்து இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியையே நடத்தாமல் விட்டிருக்கலாம். இப்போது யாருக்கு நட்டம் ? இந்திய அணிக்குத்தானே.

இங்கிலாந்திற்கு எதிராக டாஸ் ஜெயித்த பின் நாம் பேட்டிங் செய்யாமல் விட்டது ஒரு தவறு, பின்னர் ஒரு முக்கியமான வாழ்வா சாவா போட்டியில் கத்துக்குட்டியான ரவீந்தர ஜடேஜாவை முன்னால் ஆட வைத்ததும் ஒரு மாபெரும் தவறு.

விளையாட்டிற்கு முன்னுரிமை அளித்த காலம் போய் தற்போது வேறு எவற்றிற்கோ முன்னுரிமை அளிக்கும் காலம் வந்துவிட்டது.

பார்மில் இல்லாத வீரர்களுக்கு முதலில் கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும். எந்த விதமான அரசியல் விஷயங்களும் வீரர்களுக்குள் வராமல் பார்த்துக கொள்ள வேண்டும்.

வேலை வெட்டியை விட்டு கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களை இனியாவது இவர்கள் ஏமாற்றாமல் இருப்பார்களா ?

ஞாயிறு, 14 ஜூன், 2009

ஆயிரத்தில் ஒருவன் - விரைவில் வருகிறான்(ர்)







இதோ வருது அதோ வருது என போக்கு காட்டிக் கொண்டிருந்த , ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இன்று 14ஜுன் இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. செல்வராகவன் இயக்கும் படம் ஒன்றின் இசை வெளியீடு இந்த அளவிற்கு பிரம்மாண்டமாக நடைபெறுவது இதுதான் முதல் தடவை. பட்ஜெட் எகிறிவிட்டது என்ற பேச்சு ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்திற்கு இருந்து வந்தது. 30கோடிக்கும் மேல் பட்ஜெட் ஆனதாக ஒரு தகவல். பருத்தி வீரன் படத்திற்குப் பிறகு நீண்ண்ண்ண்ட இடைவெளிக்குப் பிறகு கார்த்தி நடித்திருககும் படம். ரீமா சென், ஆன்ட்ரியா , மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பார்த்திபன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் இந்த படத்தில் இல்லை. அவருக்குப் பதிலாக ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். 2009ல் தொடங்கி 7ஆம் நூற்றாண்டுக்கு கதை பயணிப்பதாக ஒரு தகவல். படத்தின் ஸ்டில்களைப் பார்க்கும் போதே படத்தின் வித்தியாசம் புரியும். இயக்குனர் செல்வராகவனுக்கு இந்த படம் நிச்சயம் பெரிய பேர் சொல்லும் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு பலமாக அடிபடுகிறது.

புதன், 10 ஜூன், 2009

சிம்புவின் போடா போடி-க்கு போட்டியாக வாடி போடி...




சிம்பு அடுத்து இயக்கி நாயகனாக நடிக்க இருக்கும் படம் போடா போடி, அவருக்கு ஜோடியாக சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடிக்க இருக்கிறார்.




இதனிடையே இந்த டைட்டிலுக்கு எதிராக(?) வாடி போடி என ஒரு படத்திற்கு டைட்டில் வைத்திருக்கிறார்கள். அந்த படத்தை இயக்க இருப்பவர் சிம்புவை வைத்து காளை படத்தை இயக்கிய தருண்கோபி. விஷால், சிம்பு இவர்களை வைத்து படத்தை இயக்கி தொந்தரவுகளைத்தான் அனுபவித்தேன் என வெளிப்படையாக கூறியவர் தருண்கோபி. தற்போது வெளிவந்துள்ள மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். தான் நடிக்க வந்ததற்கு காரணம் ஹீரோக்கள் கொடுத்த டார்ச்சர்தான் என்கிறார். அது மட்டுமல்ல, தன்னுடைய படம் ஓடக் கூடாது என்பதற்காக தவறான பிரச்சாரத்திலும், படத்தின் சுவரொட்டிகளை கிழிக்கிறார்கள் எனவும் கூறுகிறார்.




இவர் அடுத்து புதுமுகங்களை வைத்து இயக்கப் போகும் படத்திற்குத்தான் வாடி போடி என டைட்டில் வைத்திருக்கிறார், சிம்புவின் டைட்டிலுக்குப் போட்டியாக.

சனி, 6 ஜூன், 2009

பிரபுதேவா - நயன்தாரா திருமணம் நிஜமா ?


கடந்த இரண்டு நாட்களாக தமிழ் திரையுலக வட்டாரத்திலும், பத்திரிகை உலக வட்டாரத்திலும் ஒரே பரபரப்பு. பிரபுதேவா, நயன்தாரா இருவரும் திருமணம்செய்து கொண்டு விட்டதாக ஒரே பேச்சு. குறிப்பாக தெலுங்கு திரையுலகத்தில் இருந்துதான் இந்த பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஒரு சில தொலைக்காட்சிகள் இதை செய்தியாக வெளியிட்டதாகவே தகவல். தமிழ் பத்திரிகைகளில் சிலவற்றிலும் இந்த செய்தி வந்து விட்டது. பொதுவாகவே நயன்தாராவைப் பற்றி அடிக்கடி ஏதாவது ஒரு கிசுகிசு வந்து கொண்டிருக்கும். மீண்டும் அப்படித்தான் ஒரு கிசுகிசு என பத்திரிகை வட்டாரத்தில் நினைத்துக் கொண்டிருந்தனர்.


மேற்கொண்டு இந்த தகவலை நயன்தாரா வட்டாரத்தில் விசாரித்த போது, இத்தனை நாட்கள் அவர் ஆதவன் படத்திற்காக கல்கத்தாவில் இருந்ததாகவும், தற்போதுதான் சென்னைக்கு வந்திருக்கிறார் எனவும் கூறுகிறார்கள்.


இது மீண்டும் ஒரு வதந்தியா என்பது போகப் போகத்தான் தெரியும்.

வியாழன், 4 ஜூன், 2009

எங்கே போகிறார்கள் நம் ஹீரோக்கள்

நமது ஹீரோக்களுக்கு ஆக்ஷன் படங்களில் நடிக்க வேண்டும் , ஆக்ஷன் ஹீரேவாகத்தான் ஆக வேண்டும் என்ற நினைப்புதான் இருக்கிறது. யாருக்குமே நல்ல நடிகனாக வேண்டும் என்ற நினைப்பே இல்லை. நல்ல நடிகனாக எப்படி ஆவது, அதற்கு நல்ல கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இவர்கள் நடிக்கும் படங்கள் அனைத்துமே ஆக்ஷன் கதைகளாகத்தான், அதுவும் பழி வாங்கும் கதைகளாகத்தான் இருக்கிறது. ஒன்று அப்பாவைக் கொன்றவர்களை பழி வாங்குகிறார்கள், அல்லது காதலியை கொன்றவர்களை பழி வாங்குகிறார்கள், அல்லது அம்மாவின் ஆசையை நிறைவேற்றத் துடிக்கிறார்கள், அல்லது காணாமல் போன குடும்பத்தாரைத் தேடி ஊர் விட்டு ஊர் வருகிறார்கள்.

நல்ல கதைகளுக்கு பஞ்சம், எத்தனையோ பேர் நல்ல கதைகளை வைத்துக் கொண்டு கோடம்பாக்கத்தில் மட்டும் அலைந்து கொண்டிருக்கவில்லை, தமிழகம் முழுவதுமே இருக்கிறார்கள். ரஜினி , கமல் இருவர் மட்டும் எப்படி சூப்பர்ஸ்டார், சூப்பர் ஆக்டர் ஆனார்கள். அவர்கள் ஆரம்ப காலத்தில் நடித்த படங்களில் நல்ல கதைகள் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பாதையை மாற்றிக் கொண்டார்கள். ஆனால் இப்போதைய ஹீரோக்கள் இரண்டு படம் ஹிட்டான உடனேயே எதற்கோ ஆசைப்பட்டு பன்ச் டயலாக் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். ஸ்டைல் என்ற பெயரில் இவர்கள் நடிப்பதும் நம்மை ஐயோ என்று அலற வைத்து விடுகிறது. வராத பொருந்தாத ஒன்றை ஏன் செய்ய வேண்டும்.

பாவம், இவர்கள் நடிக்கும் படங்களின் ஹீரோயின்கள், நான்கு காதல் காட்சிகள், நான்கு பாடல்கள், கொஞ்சம் முத்தம், கொஞ்சம் கோபம் என அவர்களுடைய கடமை முடிந்து விடுகிறது. ஆடைகளில் கூட கொஞ்சம்தான், மொத்தத்தில் கொஞ்சமாகக் கொஞ்சி கொடுத்த வேலையை செய்து விட்டு போய்விடுகிறார்கள்.

இதற்கடுத்து பாடல்கள், கண்டிப்பாக ஹீரோவின் அறிமுகப்பாடல் இருந்தே ஆக வேண்டும், நான் வல்லவன், நான் நல்லவன், சூராதி சூரன், வீராதி வீரன், பார்த்தால் பசு, பா்ய்தால் புலி என்ற ரேஞ்சில் பாடல்கள் இருக்கும். பின்னாடி ஒரு நூறு பேர் ஆடிக் கொண்டிருப்பார்கள். அப்புறம் இரண்டு டூயட் பாடல்கள், நடுவில் ஒரு சோகப் பாடல், கடைசியாக கண்டிப்பாக குத்துப் பாடல், கிளைமாக்சில் பறந்து பறந்து சண்டைய இட்டே ஆக வேண்டும். ராவணனாக இருந்தாலும் பேசிப் பேசியே அவர்களை ராமனாக மாற்ற வேண்டும்.

இப்படி ஒரு பார்முலாவுக்குள் இருந்தால் என்னதான் ஆவது. இந்த ஆண்டில் பசங்க படத்தை் தவிர, ஒரு நல்ல படத்தைப் பார்க்க முடியாதா என நமது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

புதன், 3 ஜூன், 2009

இளையராஜாவின் தகுதியைப் பற்றிப் பேச யாருக்கும் தகுதியில்லை

கொஞ்ச நாளாக ஓய்ந்து போயிருந்த ராஜா ரஹ்மானைப் பற்றிய ஒப்பீடு மீண்டும் தேவையில்லாமல் வலைப்பதிவுகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இசைஞானி அவர்களின் இசையைப் பற்றிப் பேச யாருக்கும் தகுதியில்லை. விமர்சனம் என்ற பெயரால் ஒருவரது திறமையைப் பற்றி தேவையற்ற விவாதம் செய்யக் கூடாது என்பதே என் கருத்து. திறமையை அளவிடுவதற்கு எது அளவுகோல். இவை ஒன்றும் பள்ளிக்கூடங்களில் நடத்தும் பரீட்சையல்ல, திறமையை அளவிடுவதற்கு.

10வருடங்களில் 100படங்களுக்கு இசையமைத்தும், அமெரிக்காவிற்கு மட்டுமே சொந்தமான ஒரு விருதை வாங்குவதும் பெரிய விஷயமல்ல. மக்கள் மனதில் நிரந்தரமாக இடம் பெறுவதே மிகப் பெரும் விருது. அன்று முதல் இன்று வரை இளையராஜா அவர்களின் பாடல்கள் ஒலிக்காத வானொலிகளும் இல்லை, ஒளிக்காத தொலைக்காட்சிகளும் இல்லை.

இந்திப் படங்களுக்கு இசையமைத்து விட்டு இந்திய அளவில் பெயர் வாங்குவதும், ஆங்கிலப் படங்களுக்கு இசையமைத்து விட்டு பெயர் வாங்குவதும், பெரிய விஷயமில்லை.

எந்த விதமான பின்னணியும் இல்லாமல், எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து, இந்த அளவிற்கு பெயர் வாங்குவது முக்கியமான விஷயம்.

தயவு செய்து இனிமேலாவது இசைஞானியின் இசையப் பற்றி ஏதும் விவாதிக்காமல் இருப்பது நல்லது என பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குனர் VS நடிகை , விமர்சன சண்டை


இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திற்கும், பிரபல நடிகையும் ,தனியார் தொலைக்காட்சி ஒன்றில் திரைவிமர்சனம் நிகழ்ச்சியை வழங்கி வரும் சுஹாசினிக்கும் புதிதாக மோதல் எழுந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் வெளிவந்த, ஷக்தி சிதம்பரம் இயக்கி, ராகவா லாரன்ஸ் நடித்த ராஜாதி ராஜா படத்தை சுஹாசினி மிகவும் மோசமாக விமர்சனம் செய்ததே இதற்குக் காரணம். இன்னும் சொல்லப்போனால் சுஹாசினி அந்த படத்தைப் பார்க்க பிடிக்காமல் பாதியிலேயே சென்று விட்டதாக ஒரு தகவல். அப்படி பாதி படத்தை மட்டுமே பார்த்த சுஹாசினி அப்படி ஒரு விமர்சனம் செய்தது தவறான ஒன்று.


பொதுவாகவே அந்த நிகழ்ச்சியில் சுஹாசினி கொஞ்சம் மோதாவித்தனத்துடன்தான் நடந்து கொள்வார். ஏதோ திரைப்படங்களைப் பற்றி கரைத்துக் குடித்தவர் போலத்தான் பேசுவார். சில வாரங்களுக்கு முன் கூட கார்த்திக் அனிதா படத்தில் நடித்த ஹீரோயினை கேரளாவில் இருந்து அழைத்து வந்தது, வேஸ்ட் என சொன்னார். இவர் அறிமுகமான படங்களில் எல்லாம் எப்படி இருந்தார் என்பது நமக்குத் தெரியாதா.


பதிலுக்கு ஷக்தி சிதம்பரமும் சுஹாசினியை தாக்கி பேட்டி கொடுத்திருக்கிறார். கண்ணாடி கூண்டுக்குள் இருந்து கல் எறிகிறார் என்று சொல்லியிருக்கிறார். வேறு எதுவும் நேரடியாகத் தாக்காமல் சுஹாசனியின் கணவரான மணிரத்னத்தின் படங்களைப் பற்றி தாக்கியிருக்கிறார். தகராறு சுஹாசினிக்கும் ஷக்திக்கும்தான். அப்படியிருக்க ஷக்தி மணிரத்னத்தை தாக்குவது தேவையில்லாத ஒன்று. ராமாயண, மகாபாராதக் கதைகளை மணிரத்னம் காப்பியடித்து இயக்குவதாகக் கூறியிருக்கிறார். மணிரத்னம் சொந்தமாக எந்த கதையை எழுதி எடுத்தார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.


விமர்சனம் என்ற பெயரில் தேவையில்லாத வார்த்தைகளைக் கூறுவது இப்போது வாடிக்கையாகி விட்ட ஒன்று. எப்படியோ கொஞ்ச நாளைக்கு இந்த சண்டையை வேடிக்கை பார்க்கலாம்.




செவ்வாய், 2 ஜூன், 2009

இசைஞானியை சந்தித்தேன்

என்னுடைய பல நாள், அல்ல பல வருடக் கனவு, இசைஞானி இளையராஜா அவர்களை சந்தித்துப் பேச வேண்டும் என்பது. அந்த கனவு இன்று நனவானது. அந்த நிமிடத்தை என்னால் நிச்சயம் மறக்கவே முடியாது. பல விழாக்களில் அவரை நேரில் பார்த்திருந்தாலும் பேசும் சந்தர்ப்பம் கிடைத்ததே இல்லை. ஆனால் இன்று அந்த குறைகள் அனைத்தும் பறந்து போய் விட்டன. அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்ற போது, ஒரு மாபெரும் திறமைசாலியை நாமும் நெருக்கத்தில் சந்தித்து விட்டோம் என்ற மகிழ்ச்சி அலை பாய்ந்தது. அவரை சந்தித்த அந்த ஐந்து நிமிடங்களை என் மனதுக்குள் அப்படியே வைத்து பூட்டி விட்டேன். எனக்குள் ஏற்பட்ட பரவசத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

ஆயிரம் சொல்லுங்கள் இசை என்றால் இளையராஜா தான், இளையராஜா மட்டும்தான்.

இசைஞானிக்கு இன்று பிறந்த நாள்


இசைஞானி இளையராஜாவுக்கு இன்று 67வது பிறந்த நாள். 1976ம் ஆண்டு அன்னக்கிளி மூலம் நம்மை இசையால் தாலாட்ட வைத்தவர் இன்று வரை ஏறக்குறைய 33ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறார். தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் என்ற சிறிய ஊரில் பிறந்தவர், இந்த அளவிற்கு பெயரையும் புகழையும் அடைவதென்பது சாதாரண விஷயமல்ல. சிலருக்கு மட்டுமே சொந்தமாக இருந்த தமிழ்சினிமாவில் இளையராஜா, பாராதிராஜா, வைரமுத்து போன்றவர்களின் வரவு தமிழ் சினிமாவின் தலையெழுத்தையே மாற்றியது என்று சொன்னால் அது மிகையில்லை.


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இசையமைத்து வரும் இளையராஜாவுக்கு ஒவ்வொரு மொழியிலும் தனிப்பட்ட ரசிகர் கூட்டம் உண்டு.


ஹவ் டு நேம் இட், நத்திங் பட் வின்ட், திருவாசம், சிம்பெனி என சினிமாவித் தவிர அவருடைய திறமைக்கு சான்றாக இருப்பவை இவை.


900படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இசைஞானியின் சாதனையை மீண்டும் ஒருவர் முறியடிப்பதென்பது நடக்கக்கூடிய ஒன்றல்ல என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.


அந்த சாதனையாளரை, தமிழ் இசை மன்னனை இன்றைய நாளில் வாழ்த்துவதில் பெருமையடைவோம்.

ஞாயிறு, 31 மே, 2009

திறமையிருந்தும் - 2

மே 30ம் தேதியன்று மூணார் என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரவி தேவேந்திரன். யார் இவர் என கேட்கிறீர்களா . மண்ணுக்குள் வைரம் திரைப்படத்தில் அறிமுகமாகி வேதம் புதிது படத்தில் பாராதிராஜாவால் பட்டை தீட்டப்பட்டவர். இதழோடு இதழ் சேரும் நேரம், பொங்கியதே காதல் வெள்ளம், கண்ணுக்குள் நூறு நிலவா, புத்தம் புது ஓலை , மந்திரம் சொல்வேன் , போன்ற ஹிட்டான பாடல்களுக்கு சொந்தக்காரர். அப்படிப்பட்ட பாடல்களைக் கொடுத்தவர் நீநீநீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைக்கும் படம்தான் மூணார். சினிமாவில் திறமையிருந்தும அதிர்ஷ்டம் இல்லாத ஒரே காரணத்தால் முன்னணிக்கு வராமல் போன எத்தனையோ திறமைசாலிகளில் இவரும் ஒருவர். வேதம் புதிது பாடல்களுக்கு இசையமைத்தது இளையராஜா என இன்னமும் நினைப்பவர்கள் பல பேர். அப்படியிருக்கும் போது எப்பேர்ப்பட்ட திறமைசாலி புகழின் வெளிச்சத்துக்கு வராமல் போனது ஏன் ?

வியாழன், 28 மே, 2009

திறமையிருந்தும் அழகிருந்தும்


திறமையிருந்தும் அழகிருந்தும் திரையுலகில் சிலரால் சீக்கிரம் ஜொலிக்க முடியாது. சில வருடங்களாவது ஆகி விடும். சிலரைப் பார்க்கும் போது மட்டும் இவர்கள் எப்போது வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறுவார்கள் எனத் தோன்றும். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகர் நந்தா. மௌனம் பேசியதே படத்தில் அறிமுகமானவர், முதல் படத்திலேயே யார் இவர் என பார்க்க வைத்தவர். ஆனால் ஏனோ உடனடியாக முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடிக்காமல் போய் விட்டார். இதற்கடுத்து இவர் நடித்த புன்னகைப்பூவே படம் கூட ௧00 நாட்கள் ஓடிய படம்தான். கோடம்பாக்கம், அகரம், உற்சாகம், போன்ற படங்களில் நடித்தார். ஈழத்தை மையமாகக் கொண்ட ஆணிவேர் படத்தின் மூலம் உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் மனதில் இடம் பிடித்தார்.


இருந்தாலும் இன்னும் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடிக்காமல் இருக்கிறாரே என்ற ஒரு வருத்தம் எனக்கு இருந்ததுண்டு. ஆனால் இது விரைவில் தீர்ந்து விடும் என எதிர்பார்க்கலாம். காரணம் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் உருவாகும் ஈரம், ஆனந்தபுரத்து வீடு ஆகிய இரு படங்களிலும் இவர்தான் கதாநாயகன். இந்த ஆண்டிற்குள் இவரும் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்துவிடுவார் என நம்பலாம்.


அவருக்கு இப்போதே நம் வாழத்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.

புதன், 27 மே, 2009

ஒரு ஸ்டார்தான் சூப்பர்ஸ்டாராக முடியும்


கடந்த சனியன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புவனா ஒரு கேள்விக்குறி படம் பார்க்க நேர்ந்தது. நீண்ட நாட்களாக இந்த படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆவல், அன்றுதான் தீர்ந்தது. சிறு வயதில் அந்த படத்தைப் பார்த்ததாக (?) ஞாபகம். ரஜினி பாடும் - ராஜா என்பார் மந்திரி என்பார் - பாடல் அந்த நாட்களில் விரும்பிக் கேட்ட ஒன்று (இன்றும் கூடத்தான்). வில்லனாகவே நடித்து வந்த ரஜினி நல்லவராக நடித்த படம் இது. கதாநாயகனான சிவகுமார், சுமித்ராவைக் காதலித்து,கர்ப்பமாக்கி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் ரஜினியே சுமித்ராவை திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது. சுமித்ராவை தொடாமலே கணவனைப் போல இருக்கிறார் ரஜினி. சிவகுமாருக்கு திருமணத்திற்குப் பின் குழந்தை பாக்கியம் இல்லாமல் போக, சுமித்ராவிடம் இருக்கும் தன் மகனை தத்தெடுக்க முயல்கிறார். அது நடந்ததா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை. (எதையோ சொல்ல வந்து கதை சொல்லிவிட்டேன் மன்னிக்கவும்) இந்த படத்தில் ரஜினியின் நடிப்பு, ஆகா வென இருந்தது. கதாபாத்திரத்தை உணர்ந்து அவர் நடித்திருந்த விதம் ரசிக்கும்படி இருந்தது. அப்பேற்பட்ட ஒரு உன்னத நடிகரை பல மசாலா படங்களில் நடிக்க வைத்து, எங்கேயோ கொண்டு சென்று விட்டார்கள். இருந்தாலும் ரஜினியின் படங்கள் என்று சொன்னவுடன் அபூர்வராகங்கள், பதினாறு வயதினிலே, தப்புத்தாளங்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, எங்கேயோ கேட்ட குரல், ஸ்ரீராகவேந்திரர், தர்மதுரை, பாட்ஷா, தளபதி, போன்ற நல்ல படங்களும் ஞாபகத்துக்கு வருகின்றன. இப்படிப்பட்ட நல்ல படங்களில் நடித்திருந்தாலும் ரஜினி அவர்களின் திரையுலகப் பயணம் வேறு திசையில் சென்று விட்டது. மீண்டும் அவரிடமிருந்து இப்படிப்பட்ட படங்களை எதிர்பார்க்க முடியுமா ?

சனி, 28 பிப்ரவரி, 2009

ராஜாவின் பக்கம்

இளையராஜா என்ற ஒரு மாபெரும் இசைக் கலைஞனைப் பற்றிய பேச்சு இப்போது பரவலாக எழுந்துள்ளது. அது தேவையில்லாத ஒன்றுதான் என்றாலும் அந்த மாபெரும் கலைஞனைப் பற்றி மக்களிடத்தில் மீண்டும் ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியிருக்கிறது.


ஆஸ்கர் விருதை வென்று வந்த ஆஸ்கர் நாயகனான ஏஆர் ரகுமானே, நேற்று இளையராஜாவைப் பற்றி பேசும் போது அவர் ஆஸ்கர் விருதுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்ற நிதர்சனமான உண்மையைக் கூறியதே இதற்குச் சான்று.


அன்னக்கிளி தொடங்கி நான் கடவுள் வரை இளையராஜா அவர்களின் இசைப்பயணத்தில் நாம் பயணம் செய்து கொண்டிருக்கும் விதம் ஒரு சுகமானது. எத்தனை ஆயிரம் பாடல்கள், எப்படிப்பட்ட பின்னணி இசை, ஓய்வு இல்லாமல் கூட அவர் உழைத்த காலங்கள், அவருக்காகவே தவம் கிடந்தவர்கள், அவருடைய இனிமையான பாடல்களால் பேரையும் புகழையும் வாங்கியவர்கள், என இப்படி பல விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.


அன்னக்கிளி, பதினாறு வயதினிலே, கவிக்குயில், புவனா ஒரு கேள்விக்குறி, ப்ரியா, சிகப்பு ரோஜாக்கள், கிழக்கே போகும் ரயில், முள்ளும் மலரும், இளமை ஊஞ்சலாடுகிறது, கல்யாணராமன், தர்மயுத்தம், அன்பே சங்கீதா, உதிரிப்பூக்கள், உல்லாசப் பறவைகள், நிழல்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, மூடுபனி, ராஜ பார்வை, அலைகள் ஓய்வதில்லை, நினைவெல்லாம் நித்யா, பயணங்கள் முடிவதில்லை, மூன்றாம் பிறை , மெட்டி, காதல் ஓவியம், தங்கமகன், அடுத்தவாரிசு, மண்வாசனை, தம்பிக்கு எந்த ஊரு, சிந்து பைரவி, கீதாஞ்சலி, இதயக்கோயில், புன்னகை மன்னன், அம்மன் கோவில் கிழக்காலே, கடலோரக் கவிதைகள், மௌனராகம், எங்க ஊரு பாட்டுக்காரன், நாயகன், அக்னி நட்சத்திரம், வருஷம் பதினாறு, வெற்றி விழா, கரகாட்டக்காரன், கேளடி கண்மணி, ஈரமான ரோஜாவே, தளபதி, சின்ன தம்பி, என் ராசாவின் மனசிலே, இதயம், தேவர் மகன், செம்பருத்தி, எஜமான், மறுபடியும், மகாநதி, சிறைச்சாலை, காதலுக்கு மரியாதை, வீரா, சேது, ப்ரண்ட்ஸ், காசி, அழகி, பிதாமகன், விருமாண்டி, நான் கடவுள், என எனக்கு ஞாபகம் வந்த சில திரைப்படங்களின் பட்டியலை இங்கே கொடுத்துள்ளேன். இவை இளையராஜாவின் இனிய இசைக்கு எடுத்துக்காட்டு.


இசையையும், இளையராஜாவையும் ரசிப்பவர்கள் என்னுடைய இந்த சிறிய கருத்தையும் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.

வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

இரண்டு மாத தமிழ் திரைப்படங்கள் - ஒரு பார்வை

2009ம் ஆண்டில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களின் பட்டியலை முதலில் பார்ப்போம்.

அ ஆ இ ஈ, வில்லு, காதல்னா சும்மா இல்ல, படிக்காதவன், என்னை தெரியுமா, வெண்ணிலா கபடி குழு, கஜா, சற்று முன் கிடைத்த தகவல், பேட்டராசு, நான் கடவுள், குடியரசு, பெருமாள், சிவா மனசுல சக்தி, தநா 4777, லாடம், தீ, இரு நதிகள் ஆகியவை.

18 படங்கள் வெளியாகியுள்ளன, ஆனால் இவற்றில் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்கள், மக்களைக் கவர்ந்த படங்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணி விடலாம். வெண்ணிலா கபடி குழு, நான் கடவுள் படங்கள் மட்டுமே படைப்பு ரீதியாக கவர்ந்த படங்கள் என எடுத்துக் கொள்ளலாம். மற்ற படங்கள் வெறும் கமர்ஷியலுக்காக எடுக்கப்பட்ட படங்களே. வழக்கமான நகைச்சுவை, குத்துப் பாட்டு, கவர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்கள்தான். சில படங்கள் வந்த சுவடு கூட தெரியாமல் போய் விட்டன.

2009 ஆரம்பமே கொஞ்சம் ஆட்டத்துடன்தான் ஆரம்பித்துள்ளது. போகப் போக சரியாகி விடுமா ?

வியாழன், 26 பிப்ரவரி, 2009

ராஜா ராஜாதான்

ஆஸ்கர் விருது வாங்கவில்லை என்றாலும் ஆயிரம் ஆயிரம் ரசிகர்களின் உள்ளத்தில் குடி கொண்டிருக்கும் எங்களின் இசைஞானி இளையராஜா என்றுமே ராஜாதான். அவருடைய இசையும் பாடல்களும் விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவை. அவருடைய இசைக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் எப்போதுமே இருக்கிறது. அதை யாராலும் மாற்றவும் முடியாது மாற்றி விடவும் முடியாது. இன்று திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் எத்தனையோ பேருக்கு அவருடைய இசையும் ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை. அவருடைய பாடல்களுக்காகவே ஓடிய எத்தனையோ திரைப்படங்களை உதாரணமாகச் சொல்லலாம். அவராலேயே வெற்றி பெற்று இன்று பேர் பெற்ற எத்தனையோ பேர் அதை மறந்து விட முடியாது. எழுத வேண்டும் என்பதற்காக என்னென்னவோ எழுதுபவர்களைப் பற்றி என்னைப் போன்ற ராஜாவின் ரசிகர்கள் ஒரு போதும் கவலைப்படப் போவதில்லை.

விருதுகள் மட்டுமே ஒருவரின் திறமைக்கு அளவுகோல் அல்ல என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஏஆர்.ரகுமான் அவர்களுக்கு கிடைத்த விருதுகளுக்காக நாம் நிச்சயம் அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். அவருடைய சாதனைகளில் இதுவும் ஒரு மணிமகுடம்தான் இன்னும் பல விருதுகள் கிடைக்க அவரை வாழ்த்துவோம்.