வியாழன், 13 ஆகஸ்ட், 2009

சுதந்திர தினத்துக்கு ஒரே ஒரு படம்தான்


தீபாவளி, பொங்கல், வருடப் பிறப்பு, சுதந்திர தினம் இவைதான் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாட்கள். இந்த நாட்களில் எப்படியும் குறைந்தது ஐந்து படங்களாவது வெளிவரும். ஆனால் இந்த சுதந்திர தினத்தன்று ஒரே ஒரு படம்தான் வெளி வர இருக்கிறது. அதுவும் ஒரு நாள் முன்னதாகவே வெளியாகிறது. சேரன் இயக்கி நடித்திருக்கும் பொக்கிஷம் படம்தான் அது. கந்தசாமியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது அடுத்த வாரமோ அல்லது அதற்கடுத்த வாரமோ வெளியாகும் எனத் தெரிகிறது. ஐந்து படங்களாவது வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டு வெறும் ஒரே ஒரு படம் மட்டுமே வெளிவருவது தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமான விஷயமல்ல. சென்ற மாதத்தில் வெளிவந்த படங்களில் எதுவுமே வெற்றிப்படங்களாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. டிடிஎஸ், க்யூப், டிஐ இப்படி எத்தனையோ தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட பிறகு, திரைப்படத்தின் வெற்றி என்பது அதல பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம் என உடனடியாக கண்டு பிடித்து அந்த குறையை அகற்றினால்தான் தமிழ் சினிமா மேலும் வளர வழி பிறக்கும். இல்லையேல் திரைப்படங்களை இனி தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்க்க இயலுமோ என அச்சப்பட வேண்டியிருக்கிறது.


ஒரு படத்தயாரிப்பு செலவும் கோடிகளைத் தாண்டி பத்து கோடி வரையில் செல்வதும இதற்கு ஒரு காரணமாக அமையலாம். அல்லது நூறு ரூபாய்க்கு மேல் டிக்கெட் வாங்கி படம் பார்ப்பதும் காரணமாக இருக்கலாம். ஒன்று செலவுகளைக் குறைக்க வேண்டும், அல்லது கட்டணங்களை குறைக்க வேண்டும, நடிகர்களும் சம்பளத்தைக் குறைக்க வேண்டும்.இப்படி நாம் என்ன வேண்டுமானாலும் யோசனைகளைச் சொல்லலாம்.


ஆனால் நல்ல கதையுடன் தரமான படம் வந்தால் அது தானாகவே வெற்றி பெற்று விடும் என்பதை மறந்து விடக்கூடாது, மறுக்கவும் கூடாது.


கருத்துகள் இல்லை: