புதன், 27 மே, 2009

ஒரு ஸ்டார்தான் சூப்பர்ஸ்டாராக முடியும்


கடந்த சனியன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புவனா ஒரு கேள்விக்குறி படம் பார்க்க நேர்ந்தது. நீண்ட நாட்களாக இந்த படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆவல், அன்றுதான் தீர்ந்தது. சிறு வயதில் அந்த படத்தைப் பார்த்ததாக (?) ஞாபகம். ரஜினி பாடும் - ராஜா என்பார் மந்திரி என்பார் - பாடல் அந்த நாட்களில் விரும்பிக் கேட்ட ஒன்று (இன்றும் கூடத்தான்). வில்லனாகவே நடித்து வந்த ரஜினி நல்லவராக நடித்த படம் இது. கதாநாயகனான சிவகுமார், சுமித்ராவைக் காதலித்து,கர்ப்பமாக்கி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் ரஜினியே சுமித்ராவை திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது. சுமித்ராவை தொடாமலே கணவனைப் போல இருக்கிறார் ரஜினி. சிவகுமாருக்கு திருமணத்திற்குப் பின் குழந்தை பாக்கியம் இல்லாமல் போக, சுமித்ராவிடம் இருக்கும் தன் மகனை தத்தெடுக்க முயல்கிறார். அது நடந்ததா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை. (எதையோ சொல்ல வந்து கதை சொல்லிவிட்டேன் மன்னிக்கவும்) இந்த படத்தில் ரஜினியின் நடிப்பு, ஆகா வென இருந்தது. கதாபாத்திரத்தை உணர்ந்து அவர் நடித்திருந்த விதம் ரசிக்கும்படி இருந்தது. அப்பேற்பட்ட ஒரு உன்னத நடிகரை பல மசாலா படங்களில் நடிக்க வைத்து, எங்கேயோ கொண்டு சென்று விட்டார்கள். இருந்தாலும் ரஜினியின் படங்கள் என்று சொன்னவுடன் அபூர்வராகங்கள், பதினாறு வயதினிலே, தப்புத்தாளங்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, எங்கேயோ கேட்ட குரல், ஸ்ரீராகவேந்திரர், தர்மதுரை, பாட்ஷா, தளபதி, போன்ற நல்ல படங்களும் ஞாபகத்துக்கு வருகின்றன. இப்படிப்பட்ட நல்ல படங்களில் நடித்திருந்தாலும் ரஜினி அவர்களின் திரையுலகப் பயணம் வேறு திசையில் சென்று விட்டது. மீண்டும் அவரிடமிருந்து இப்படிப்பட்ட படங்களை எதிர்பார்க்க முடியுமா ?

3 கருத்துகள்:

சரவணகுமரன் சொன்னது…

//தர்மதுரை, பாட்ஷா//

என்னங்க மசாலா படங்களையும் சேர்த்துக்கிட்டீங்க?

kavi சொன்னது…

என் பார்வையில் தர்மதுரை , தம்பிகளுக்காக உழைத்த அண்ணனின் கதையாகத்தான் தெரிகிறது. பாட்ஷா , நண்பனுக்காக தாதாவாகி, குடும்பத்துக்காக உழைக்கும் ஒரு அண்ணனின் கதையாகத்தான் தெரிகிறது.

Srinivas சொன்னது…

சூப்பர்.....மணிரத்னம் எடுத்தால் மீண்டும் பழைய ரஜினியை காணலாம்.
எனக்கு ரஜினி வில்லன் வேடத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது ..நெற்றி கண்ணில் அட்டகாசமாய் நடித்திருப்பார்