சனி, 27 ஜூன், 2009

நாடோடிகள் - * நச் * என்று ஒரு திரைப்படம்




ச என்ற எழுத்தை ஷ வாகவும் உலகத்தரத்தில் ரத்தினமான படங்களைக் கொடுப்பது தாங்கள்தான் எனவும் மார் தட்டிக் கொள்ளும் இயக்குனர்கள், தயவு செய்து இந்த படத்தைப் பார்க்க வேண்டும். சூப்பர்ஸ்டார்களும், சூப்பர் ஆக்டர்களும், பல இளைய, புரட்சித் தளபதிகளும் எப்படிப்பட்ட படங்களில் நடிக்க வேண்டும் என இந்த படத்தைப் பார்த்து கற்றுக் கொள்ளட்டும்.


திரைப்படம் என்பது வாழ்வியலை ஒட்டி அமைய வேண்டும். பல புகழ் பெற்ற படங்களின் பின்னணி நம் வாழ்வில் நிச்சயம் நடந்திருக்கும். இந்த படத்தைப் பார்க்கும் போது, படம் என்பது நமக்குத் தோன்றவே தோன்றாது.


படத்தின் ஆரம்பத்திலேயே , என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன், என சொல்லி கைதட்டல் வாங்கி விடுகிறார் இயக்குனர் சமுத்திரக்கனி. நட்பும் , காதலும் இல்லாத வாழ்ககை ஒரு வாழ்க்கையே இல்லை. பாசம் கூட சிலருக்குக் கிடைக்காமல் போகலாம், ஆனால் இவையிரண்டும் கண்டிப்பாக கிடைத்திருக்கும். நட்பும், காதலுமே பிரிந்து கூடப் போயிருக்கும். ஆனால் அவற்றை நமக்கு பிடிக்காது என்று சொல்லிவிட முடியாது.


அப்படிப்பட்ட உன்னதமான உணர்வை மிகவும் அழகாகக் கையாண்டிருக்கிறார் இயக்குனர். நண்பனின் நண்பனுக்கு வந்த காதலுக்காக தங்கள் வாழ்க்கையை தொலைத்தவர்களைப் பற்றிய கதை. நண்பர்களாக சசிகுமார், பரணி, விஜய் மூவருமே அந்த கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள். ஆரம்பம் முதலே அவர்களில் ஒருவராக நாமும் ஆகிவிட்டதைப் போன்ற ஒரு உணர்வு.


நண்பர்களின் காதலை சேர்த்து வைக்கப் போராடியவர்களின் கதைகளைத்தான் இத்தனை காலமாக பார்த்துக் கொண்டு வருகிறோம். முதல் முறையாக, திருமணத்திற்குப் பின் அந்த காதலர்கள் என்ன ஆனார்கள் என்பதை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

சசிக்கும் அவருடைய முறைப்பெண்ணான அனன்யாவுக்கும் இடையே இருக்கும் காதல், விஜய்க்கும் சசியின் தங்கையான அபிநயாவுக்கும் இடையே இருக்கும் காதல் என , சசி நண்பனின் கெட்ட காதலுக்கு இடையே, இவர்களின் நல்ல காதலும் படத்தில் உண்டு.

சசிகுமார் சுப்ரமணியபுரம் படத்திற்குப் பிறகு, மீண்டும் ஒரு தரமான படத்தில் தன்னுடைய பெயரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். சசி அவர்களே நல்ல சினிமா பக்கமே இருங்கள், தப்பித் தவறி மசாலா சினிமா பக்கம் சேர்ந்து விடாதீர்கள், என் தாழ்மையான வேண்டுகோள்.

புதுமுகங்கள் அனன்யா, அபிநயா இருவருமே அசத்திட்டாங்கய்யா. அபிநயா வாய்பேச முடியாத, காது கேளாதவர் . இவையிருந்தும் நடிக்கத் தெரியாத நடிகைகளுக்கு மத்தியில் இவரின் நடிப்பு அவர்களுக்கு பாடமாக அமையட்டும்.

இசை சுந்தர் சி பாபு. வாளமீனுக்கும், கத்தாழக் கண்ணால புகழுக்கும் சொந்தக்காரர். இந்த படத்தில் இசை ராஜ்ஜியமே நடத்தியிருக்கிறார். ஆனால் விட்ட குறை தொட்ட குறை போலிருக்கிறது, யக்கா யக்கா என ஒரு பாடலை போட்டிருக்கிறார். ஆனால் ஜகடம் ஜகடம் பாடல் தியேட்டரையே உலுக்குகிறது.


கல்லூரி படத்தில் நடித்த பரணி, சென்னை-28 படத்தில் நடித்த விஜய், கஞ்சா கருப்பு இவர்களுக்கும் இந்த படம் பேரைக் கொடுக்கும். வழக்கமான தமிழ் சினிமா வில்லன்களாக ஜெயப்பிரகாஷ், மற்றொரு பெண்மணி (பேர் தெரியவில்லை) .


நமோ நாராயணன் என ஒரு அறிமுக நடிகர். டிஜிட்டல் பேனரை வைத்து இவர் அடிக்கும் லூட்டிக்கு தியேட்டரில் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் தரம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த படம் ஒரு சாட்சி. இப்படி வருடத்திற்கு நான்கைந்து படங்கள் வந்தாலே போதும். மூடப்பட்ட திரையரங்குகள் கூட மீண்டும் புத்துயிர் பெற்று விடும்.




3 கருத்துகள்:

Kannan சொன்னது…

Super comments!! Inspired me to watch this movie. SOON...

பெயரில்லா சொன்னது…

படம் பார்த்துட்டேன் தல..உங்க விமர்சனமுன் நச்சுன்னு இருக்கு...படத்தைப் போலவே...

கதிரவன் சொன்னது…

உங்க விமரிசனமும் ‘நச்’னுதான் இருக்குதுங்க