வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

பொக்கிஷம் - தமிழ் சினிமாவுக்கு


எத்தனையோ காதல் படங்களை பார்த்து வருகிறோம். ஆனால் அவற்றில் ஒரு சிலதான் நம் நெஞ்சில் நீங்காத இடத்தைப் பிடிக்கின்றன. அந்த ஒரு சில படங்களில் இந்த படமும் இடம் பெறும்.


இன்றைய தலைமுறை, காதல் கடிதம் என்ற ஒன்றைப் பார்க்கிறார்களா என்பது ஆச்சரியமான ஒன்றுதான். ஈமெயில், எஸ்எம்எஸ் என்ற அளவில்தான் அவர்களின் காதல் பரிமாற்றம் இருக்கிறது. மறந்து போன அல்லது மறக்கப்பட்ட அந்த காதல் கடிதங்களை இந்த படத்தின் வாயிலாக மீண்டும் ஞாபகப்படுத்தியிருக்கிறார் சேரன்.


ஒரு காட்சியில் காதலி பத்மப்ரியாவுடன் டிரங்கால் போட்டு பேசுவதற்காக அவர் தவிக்கும் தவிப்பைப் பார்க்கும் போது, இன்று பக்கத்து பக்கத்து அறையில் உட்கார்ந்து கூட செல்போனில் கூப்பிட்டு பேசுவதை நினைத்தால் , ஏதேதோ சொல்லத் தோன்றுகிறது. காதலியின் கையெழுத்துடன், அந்த காதல் உணர்வுகளை கடிதங்களின் வாயிலாக நாம் உணரும் அழகே தனிதான். காதல் கடிதம் எழுதிய காலத்து மக்களுக்குத்தான் அதன் ரசனை புரியும். கிறுக்கலான கையெழுத்தாக இருந்தால் கூட அது ஒரு ஓவியம் போலத்தான் தெரியும்.


இப்படி காதல் கடிதங்களைப் பற்றி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். அவற்றைத்தான் அழகான காட்சிகளாக வடிவமைத்திருக்கிறார் சேரன். கல்கத்தாவில் இருக்கும் சேரனுக்கும் நாகூரில் இருக்கும் பத்மப்ரியாவுக்கும் காதல். இந்த காதலுக்கு பாலமாக இருப்பதே அவர்களின் காதல் கடிதங்கள்தான். ஒரு சந்தர்ப்பத்தில் அந்த கடிதப் பரிமாற்றம் திடீரென நின்று விட பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.


காட்சிக்கு காட்சி காதல் கடிதங்களே வந்து கொண்டிருப்பது கொஞ்சம் தொய்வைக் கொடுத்தாலும், அதிலும் ஒரு ரசனை இருக்கத்தான் செய்கிறது. படத்தின் முடிவு நிச்சயம் எதிர்பார்க்காத ஒன்றுதான். திடீரென படத்தை முடித்து விட்டது போல் தோன்றினாலும் அதுதான் சரியான முடிவாகவும் மனதில் படுகிறது.


ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து படத்திற்குப் பிறகு சேரன் தனக்கென உருவாக்கி நடித்திருக்கும் லெனின் கதாபாத்திரத்திற்கு அழகாக உயிர் கொடுத்திருக்கிறார்.


நதீராவாகத்தான் தெரிகிறார் பத்மப்ரியா. அவருடைய கண்கள் அதிகம் பேசுகின்றன.


விஜயகுமார், இளவரசு, ஆர்யன் ராஜேஷ் இப்படி ஒரு சில கதாபாத்திரங்களே நடித்திருந்தாலும், அனைவரின் பங்களிப்பும் சரியாக அமைந்துள்ளது.


சபேஷ் முரளியின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு உயிரோடத்தைக் கொடுத்திருக்கின்றன. நிலா, பாட்டு திரும்பத் திரும்ப கேட்க வைக்கும்.


ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு, வைரபாலனின் கலையும், படத்தின் கால ஓட்டங்களுக்கு தக்கபடி பயணிக்க வைக்கின்றன.


நல்ல படங்களை ரசிக்கும் தமிழக மக்கள் நிச்சயம் இந்த படத்தையும் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக மாற்றுவார்கள் என நம்பலாம்.


11 கருத்துகள்:

Nathanjagk சொன்னது…

அப்படியா? பாத்துடுவோம்! எத்தனையோ இடிகளை தாங்கின தமிழ் ரசிக நெஞ்சு இது...!!

யாத்ரீகன் சொன்னது…

Unmaithamizhan Cable shankar yellam pottu thaakkirukaanga.. neenga ipdi solreenga

kavi சொன்னது…

நன்றி யாத்ரீகன்.
நமது திரைப்பட ரசனை என்பது இன்னும் அப்படியேதான் இருந்து கொண்டிருக்கிறது. நாலு குத்துப்பாட்டு, தொப்புள் தெரிய நடனமாடும் ஹீரோயின்கள், பன்ச் டயலாக் பேசும் ஹீரோக்கள், அடுத்தவரை கிண்டல் செய்து பேசும் காமெடியன்கள் என வரும் படங்களைத்தான் நாம் வரவேற்கிறோம். மென்மையான, ஒரு தரம் வாய்ந்த படத்தை மாறுபட்ட படத்தை ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறோம். சிலருக்கு விமர்சனம் என்றாலே போட்டுத் தாக்க வேண்டும் என்பதுதான் தெரிகிறது. அவர்களின் உள்மனதில் இருக்கும் ஏதோ ஒரு வெறுப்பின் வெளிப்பாடுதான் இது. சேரன் போன்ற இயக்குனர்கள் தமிழ்நாட்டில் இல்லாமல் போனால் தமிழ்சினிமா என்றோ தரம் கெட்டுப் போயிருக்கும். நல்ல படங்களுக்கு தயவு செய்து ஆதரவு தாருங்கள்.

Athisha சொன்னது…

\\ஒரு காட்சியில் காதலி பத்மப்ரியாவுடன் டிரங்கால் போட்டு பேசுவதற்காக அவர் தவிக்கும் தவிப்பைப் பார்க்கும் போது, இன்று பக்கத்து பக்கத்து அறையில் உட்கார்ந்து கூட செல்போனில் கூப்பிட்டு பேசுவதை நினைத்தால் , ஏதேதோ சொல்லத் தோன்றுகிறது. \\


கவி மிக நல்ல விமர்சனம்.

நீங்கள் காதல் கோட்டை படம் பார்க்கலையா?

Shajahan.S. சொன்னது…

அரசியல்வாதிகளும் சரி, சினிமாக்காரர்களும் சரி தங்கள் இமேஜ் குறையும் போது எடுக்கும் அவதாரம் தான் மத அடிப்படையிலான சமூக சிந்தனைகள்.இதில் சேரனும் விதிவிலக்கல்ல.இதில் சேரன் காதலையும் வாழவைக்கவில்லை.மதநல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முயற்சிக்கவில்லை. ஒன்று செய்திருக்கலாம். இந்த படப்பெட்டியையும் பொக்கிஷமாக நினைத்து மூடியே வைத்து சென்றுவிட்டால் 40வருடம் கழித்து போலி மததீவிரவாதமும், போலி அரசியல், சினிமா(தீவிர)வாதிகளும் இல்லாத மனித நேயம் மிக்க உலகில் இந்த படம் வருங்கால காமடியாக அமைந்திருக்கும்.

kavi சொன்னது…

//நீங்கள் காதல் கோட்டை படம் பார்க்கலையா?//

அதிஷா, அங்கங்கு காதல் கோட்டை டச் இருப்பது மறுப்பதற்கில்லைதான். ஒரு வேளை சேரன் அவர்கள் பார்த்திருக்கமாட்டோரோ என நினைக்கிறேன்.

kavi சொன்னது…

ஷாஜகான் , உங்களுக்கு என்ன கோபம் என்பது எனக்கு புரியவில்லை. சேரன் இந்த படத்தில் காதலை மட்டுமே முன்னிலைப்படுத்தியிருப்பதாகத் தோன்றுகிறது. முடிந்தவரை யாருடைய மனமும் புண்படாதபடிதான் படம் அமைந்துள்ளது.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

எல்லாரும் படம் நல்லாயில்லைன்னு சொல்றாங்களே?

ஃபாலோவர் விட்ஜட் எங்க

கமெண்ட் வெரிஃபிகேசன் இன்னும் எதுக்கு? எடுத்துவிடுங்கள்

துபாய் ராஜா சொன்னது…

நல்லதொரு நியாயமான விமர்சனம்.

kavi சொன்னது…

//ஃபாலோவர் விட்ஜட் எங்க

கமெண்ட் வெரிஃபிகேசன் இன்னும் எதுக்கு? எடுத்துவிடுங்கள்//

என்னுடைய விட்ஜெட்டில் பாலோயர் எக்ஸ்பரிமென்டல் என காட்டுகிறது. இணைக்க முடியவில்லை.

கமெண்ட் வெரிபிகேசன் எடுத்து விட்டேன். ஆலோசனைக்கு நன்றி.

kavi சொன்னது…

//நல்லதொரு நியாயமான விமர்சனம்.//

நன்றி. சில பதிவுகளில் காணப்படுவது போல் அவ்வளவு மோசமான படம் அல்ல. என் மனதில் நியாயம் என பட்டதை எழுதினேன்.