ஞாயிறு, 31 மே, 2009

திறமையிருந்தும் - 2

மே 30ம் தேதியன்று மூணார் என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரவி தேவேந்திரன். யார் இவர் என கேட்கிறீர்களா . மண்ணுக்குள் வைரம் திரைப்படத்தில் அறிமுகமாகி வேதம் புதிது படத்தில் பாராதிராஜாவால் பட்டை தீட்டப்பட்டவர். இதழோடு இதழ் சேரும் நேரம், பொங்கியதே காதல் வெள்ளம், கண்ணுக்குள் நூறு நிலவா, புத்தம் புது ஓலை , மந்திரம் சொல்வேன் , போன்ற ஹிட்டான பாடல்களுக்கு சொந்தக்காரர். அப்படிப்பட்ட பாடல்களைக் கொடுத்தவர் நீநீநீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைக்கும் படம்தான் மூணார். சினிமாவில் திறமையிருந்தும அதிர்ஷ்டம் இல்லாத ஒரே காரணத்தால் முன்னணிக்கு வராமல் போன எத்தனையோ திறமைசாலிகளில் இவரும் ஒருவர். வேதம் புதிது பாடல்களுக்கு இசையமைத்தது இளையராஜா என இன்னமும் நினைப்பவர்கள் பல பேர். அப்படியிருக்கும் போது எப்பேர்ப்பட்ட திறமைசாலி புகழின் வெளிச்சத்துக்கு வராமல் போனது ஏன் ?

வியாழன், 28 மே, 2009

திறமையிருந்தும் அழகிருந்தும்


திறமையிருந்தும் அழகிருந்தும் திரையுலகில் சிலரால் சீக்கிரம் ஜொலிக்க முடியாது. சில வருடங்களாவது ஆகி விடும். சிலரைப் பார்க்கும் போது மட்டும் இவர்கள் எப்போது வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறுவார்கள் எனத் தோன்றும். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகர் நந்தா. மௌனம் பேசியதே படத்தில் அறிமுகமானவர், முதல் படத்திலேயே யார் இவர் என பார்க்க வைத்தவர். ஆனால் ஏனோ உடனடியாக முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடிக்காமல் போய் விட்டார். இதற்கடுத்து இவர் நடித்த புன்னகைப்பூவே படம் கூட ௧00 நாட்கள் ஓடிய படம்தான். கோடம்பாக்கம், அகரம், உற்சாகம், போன்ற படங்களில் நடித்தார். ஈழத்தை மையமாகக் கொண்ட ஆணிவேர் படத்தின் மூலம் உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் மனதில் இடம் பிடித்தார்.


இருந்தாலும் இன்னும் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடிக்காமல் இருக்கிறாரே என்ற ஒரு வருத்தம் எனக்கு இருந்ததுண்டு. ஆனால் இது விரைவில் தீர்ந்து விடும் என எதிர்பார்க்கலாம். காரணம் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் உருவாகும் ஈரம், ஆனந்தபுரத்து வீடு ஆகிய இரு படங்களிலும் இவர்தான் கதாநாயகன். இந்த ஆண்டிற்குள் இவரும் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்துவிடுவார் என நம்பலாம்.


அவருக்கு இப்போதே நம் வாழத்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.

புதன், 27 மே, 2009

ஒரு ஸ்டார்தான் சூப்பர்ஸ்டாராக முடியும்


கடந்த சனியன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புவனா ஒரு கேள்விக்குறி படம் பார்க்க நேர்ந்தது. நீண்ட நாட்களாக இந்த படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆவல், அன்றுதான் தீர்ந்தது. சிறு வயதில் அந்த படத்தைப் பார்த்ததாக (?) ஞாபகம். ரஜினி பாடும் - ராஜா என்பார் மந்திரி என்பார் - பாடல் அந்த நாட்களில் விரும்பிக் கேட்ட ஒன்று (இன்றும் கூடத்தான்). வில்லனாகவே நடித்து வந்த ரஜினி நல்லவராக நடித்த படம் இது. கதாநாயகனான சிவகுமார், சுமித்ராவைக் காதலித்து,கர்ப்பமாக்கி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் ரஜினியே சுமித்ராவை திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது. சுமித்ராவை தொடாமலே கணவனைப் போல இருக்கிறார் ரஜினி. சிவகுமாருக்கு திருமணத்திற்குப் பின் குழந்தை பாக்கியம் இல்லாமல் போக, சுமித்ராவிடம் இருக்கும் தன் மகனை தத்தெடுக்க முயல்கிறார். அது நடந்ததா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை. (எதையோ சொல்ல வந்து கதை சொல்லிவிட்டேன் மன்னிக்கவும்) இந்த படத்தில் ரஜினியின் நடிப்பு, ஆகா வென இருந்தது. கதாபாத்திரத்தை உணர்ந்து அவர் நடித்திருந்த விதம் ரசிக்கும்படி இருந்தது. அப்பேற்பட்ட ஒரு உன்னத நடிகரை பல மசாலா படங்களில் நடிக்க வைத்து, எங்கேயோ கொண்டு சென்று விட்டார்கள். இருந்தாலும் ரஜினியின் படங்கள் என்று சொன்னவுடன் அபூர்வராகங்கள், பதினாறு வயதினிலே, தப்புத்தாளங்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, எங்கேயோ கேட்ட குரல், ஸ்ரீராகவேந்திரர், தர்மதுரை, பாட்ஷா, தளபதி, போன்ற நல்ல படங்களும் ஞாபகத்துக்கு வருகின்றன. இப்படிப்பட்ட நல்ல படங்களில் நடித்திருந்தாலும் ரஜினி அவர்களின் திரையுலகப் பயணம் வேறு திசையில் சென்று விட்டது. மீண்டும் அவரிடமிருந்து இப்படிப்பட்ட படங்களை எதிர்பார்க்க முடியுமா ?