வெள்ளி, 9 ஜூலை, 2010

மதராசபட்டிணம் - திரைவிமர்சனம்-சுதந்திர போராட்டத்தில் காதல்



தமிழ் சினிமாவில் தரமான படங்களும் வரும், தரமான இயக்குனர்களும் இருக்கிறார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கும் படம். 1945களில் இருந்த மதராச பட்டினத்தை கண்முன் நிறுத்தியிருப்பதே படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம். அதற்காக உழைத்த அனைவரையும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.
படத்தின் கதை கொஞ்சம் டைட்டானிக், கொஞ்சம் லகான், கொஞ்சம் ஆட்டோகிராப் ஆகியவற்றை ஞாபகப்படுத்தினாலும் கதை நடந்த 1945ம் வருடத்திய பின்னணி அனைத்தையும் மறக்கச் செய்து விடுகிறது.
ஒரு 80 வயது பாட்டி லண்டனிலிருந்து ஒரு கடமையை முடிப்பதற்காக 60 வருடங்கள் கழித்து சென்னைக்கு வருகிறார். ஒரு பழைய புகைப்படத்தை வைத்துக் கொண்டு அவரைத் தேடி சென்னை நகர வீதிகளில் அலைகிறார். இன்றைய நிலையில் அவர் பார்க்கும் இடங்கள், சம்பவங்களை வைத்து கதை பின்னோக்கி 1945க்கு நகர்கிறது. சென்னை மாகாண கவர்னரின் மகளாக (ஏமி ஜாக்சன்) இந்த பாட்டிதான் 60 வருடங்களுக்கு முன் 1945ல் மதராச பட்டினத்திற்கு (சென்னைக்கு) வருகிறார். வந்த இடத்தில் சலவைத் தொழில் செய்யும் ஆர்யாவின் வலிமையையும் அழகையும் கண்டு அவர் மீது காதல் கொள்கிறார். அதே சமயம் சென்னை மாகாண போலீஸ் கமிஷனராக இருப்பவரும் ஏமி மீது காதல் கொள்ள, கவர்னர் திடீரென ஏமிக்கும் போலீஸ் கமிஷனருக்கும் நிச்சயம் செய்து விடுகிறார். ஆனால் இந்த எதிர்ப்புகளை மீறி ஏமி ஆர்யா மீது தீவிரமான காதலை வளர்க்கிறார். இதனிடையே இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவு எடுக்கிறது. மகளை அழைத்துக் கொண்டு லண்டனுக்கு செல்ல முடிவெடுக்கிறார் கவர்னர். ஆனால் அவரிடமிருந்து ஏமி தப்பித்து ஆர்யாவைத் தேடி ஓடுகிறார். 1947ல் நடக்கும் இந்த காதலின் முடிவு 2010ல் எப்படி தொடர்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை.
ஆர்யாவிற்கு அவருடைய திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்பு. கதாபாத்திரத்தை உணர்ந்து அருமையாக நடித்திருக்கிறார். காதல் நாயகனாக நடிப்பதிலும், அவருடைய வீரத்தைக் காட்டுவதிலும் ஆகாவென பாராட்டும்படி நடித்திருக்கிறார்.
ஏமி ஜாக்சன் மிஸ்.இங்கிலாந்து எனத் தகவல். முதல் முறையாக நடித்திருக்கிறார். அழகான முகத்துடன் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு காட்சியில் புடவையைக் கட்டிக் கொண்டு, பொட்டு வைத்து வரும் போது, தொடர்ந்து தமிழில் நடித்தால் தமன்னாவையே தள்ளி விட்டு விடுவார் போலத் தோன்றுகிறது.
நாசர், பாலாசிங், விஎம்சி ஹனீபா, எம்எஸ் பாஸ்கர் ஆகியோரும் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.
1945-47 காலகட்டங்களை அப்படியே கண்முன் நிறுத்தியிருக்கிறார் கலை இயக்குனர். நீரவ்ஷாவின் ஒளிப்பதிவும் ரம்மியமாக அமைந்துள்ளது.
ஜிவி பிரகாஷ் இசையில், பூ பூக்கும் தருணம், ஆருயிரே பாடல்கள் மனதை வருடுகின்றன. வாம்மா துரையம்மா பாடலை உதித் நாராயணனை பாட வைத்து தமிழைக் கொலை செய்திருக்கிறார். இப்படிப்பட்ட பாடலைப் பாட தமிழில் யாருமே இல்லையா என்ன ?
கிளைமாக்சில் போலீசார் எவ்வளவோ சுட்டும் ஆர்யா, ஏமி மீது ஒரு குண்டு கூட படவில்லை என்பது போன்ற வழக்கமான காட்சிகளை தவிர்த்திருக்கலாம். சென்னை என்றால் சென்ட்ரல் ஸ்டேஷன், வால்டாக்ஸ் ரோடு மட்டும்தான் போன்றவற்றை மட்டுமே காட்டுவதை தவிர்த்து மற்ற சில பகுதிகளையும் காட்டியிருந்தால் மதராசபட்டினம் என்பதற்கு பொருத்தமாக இருந்திருக்கும். சென்ட்ரல் ஸ்டேஷன்தான் படத்தின் பெரும்பாலான காட்சிகளுக்குப் பின்னணியாக அமைந்திருக்கிறது.
இவற்றைத் தவிர பெரிய குறை தெரியாமல் விஷுவலாக காட்சிகள் நம்மை மிரள வைக்கின்றன.
இயக்குனர் விஜய் இந்த படத்தின் மூலம் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம் பெற்று விடுவார் என நம்பலாம்.

கருத்துகள் இல்லை: