ஞாயிறு, 18 ஜூலை, 2010

விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் கதை



விஜய் நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கும் வேலாயுதம் படம் சென்ற வாரம் விமரிசையாக ஆரம்பமானது. மீண்டும் ரீமேக் கதையையே படமாக்க இருக்கிறார் ராஜா. 2000ம் ஆண்டு திருப்பதிசாமி இயக்கி நாகார்ஜுனா, சௌந்தர்யா , ரகுவரன் நடித்த ஆசாத் திரைப்படத்தின் தழுவல் மாற்றுதான் வேலாயுதம் படத்தின் கதை.

தெலுங்கு ஆசாத் படத்தின் கதை இதோ.

சௌந்தர்யா ஒரு பத்திரிக்கையாளர். மாபியா கும்பல் தலைவரான ரகுவரனால் கொடுமைக்கு ஆளானவர். ரகுவரன் ஒரு தீவிரமன இந்து பக்தர். பார்ப்பவர்களிடத்தில் எல்லாம் பகவத்கீதை கருத்துக்களை பரப்புபவர். ஒரு முறை பல ரவுடிகள் விபத்தில் இறந்து கிடப்பதை சௌந்தர்யா பார்க்க நேரிடுகிறது. ரகுவரனின் கொட்டத்தை அடக்குவதற்கு இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த நினைக்கிறார். அதனால் ஆசாத் என்ற ஒரு கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கி அவர்தான் இந்த ரவுடிகளை அழித்தவர் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார். இது கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் பரவ ஆரம்பிக்கிறது. மேலும் ஆசாத் என்ற கதாபாத்திரத்தை பிரபலமாக்குகிறார் சௌந்தர்யா. நாகார்ஜுனா கிராமத்தில் வயதான அம்மா, அழகான தங்கையுடன் வசிப்பவர். அவருடைய தங்கைக்கு திருமணம் நிச்சயமானதால் , சீட்டு நிறுவனத்தில் போட்டு வைத்திருக்கும் பணத்தை எடுப்பதற்கு பட்டணத்திற்கு வருகிறார். அங்கு நடக்கும் சில விஷயங்கள் நாகார்ஜுனாதான் ஆசாத் என தவறுதலாக புரிய வைக்கிறது. சௌந்தர்யா, நாகார்ஜுனாவை சந்தித்து நடந்த விஷயங்களை சொல்கிறார். ஆனால் ஆசாத்தாக தன்னால் இருக்க முடியாது என மறுக்கிறார் நாகார்ஜுனா. இந்த சூழ்நிலையில் சீட்டு நிறுவனம் ஒரு மோசடி நிறுவனம் எனத் தெரிய வருகிறது. இதன் பின் நாகார்ஜுனா ஆசாத்தாக மாறி எதிரிகளை எப்படி அழிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

தமிழில், நாகார்ஜுனா கதாபாத்திரத்தில் விஜய்யும், சௌந்தர்யா கதாபாத்திரத்தில் ஜெனிலியாவும், நடிக்கிறார்கள்.

செவ்வாய், 13 ஜூலை, 2010

ராவண ரகசியம் !


உலக சினிமா ரசிகர்களால் பரபரப்பாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ராவணன், ராவண் திரைப்படங்கள் இப்படி ஏமாற்றிவிடும் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஜுன் 18ல் வெளியான இப்படத்தின் இந்திப் பதிப்பு முதல் வாரத்திலேயே 20 கோடி வசூல் செய்ததாக மீடியாவில் பரபரப்பைக் கிளப்பினார்கள். ஆனால் அடுத்த வாரங்களில் நடந்த கதையே வேறு. இப்படி ஒரு இறங்கு முகம் ஏற்படும் என நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

ராவண் வெளியான முதல் வாரத்தில் வசூலித்த தொகை 20 கோடிக்கு மேல். இரண்டாவது வாரம் வசூலித்த தொகை 2 கோடியே 70 லட்சம், ஜுலை 8 ம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாவது வாரத்தில் வசூலித்த தொகை 22 லட்சம் மட்டுமே.

ராவணன் வெளியான முதல் வாரத்தில் சென்னையில் மட்டும் வசூலித்த தொகை 2 கோடிக்கு மேல், இரண்டாவது வாரத்தில் வசூலித்த தொகை 54 லட்சம், மூன்றாவது வாரத்தில் வசூலித்த தொகை 17 லட்சம் மட்டுமே.

10 ரூபாய் முதல் போட்டு 12 ரூபாய் சம்பாதிப்பது லாபமா, இல்லை 1000 ரூபாய் முதல் போட்டு 1002 ரூபாய் சம்பாதிப்பது லாபமா ?

சனி, 10 ஜூலை, 2010

ஆனந்தபுரத்து வீடு - விமர்சனம்



சன்டிவியில் ஒளிபரப்பான மர்மதேசம், சிதம்பரரகசியம், ருத்ரவீணை போன்ற தொடர்களை இயக்கி புகழ் பெற்ற சின்னத்திரை இயக்குனர் நாகா இயக்கியிருக்கும் முதல் பெரியதிரை படம். அவருக்கு பிடித்த மர்மப் படமாகவே இந்த படத்தைக் கொடுத்திருக்கிறார்.

சென்னையிலிருந்து மனைவி சாயாசிங், மகன் ( 2 வயது இருக்கும் ) ஆகியோருடன் தனது அப்பா, அம்மா வாழ்ந்த ஊரான ஆனந்தபுரத்துக்கு வருகிறார் நந்தா. ஆனந்தவிலாஸ் என்ற பெயருடைய அந்த வீடு, ஒரு பெரிய பழைய காலத்து பங்களாவாக இருக்கிறது. வீட்டுக்குள் நுழையும் போதோ ஒரு பயத்துடன் நுழைகிறார் சாயாசிங். குளிக்கும் போது கூட கதவைத் திறந்து வைத்துக் கொண்டு குளிக்கும் அளவிற்கு பயம் கொண்டவர் இவர். காரணம் இவருக்கு இருக்கும் கிளீனோபோபியா வியாதி. ஆனால் இவருடைய சிறு வயது மகன், அந்த வீட்டுக்குள் எந்த பயம் இல்லாமல் சுற்றி வர ஆரம்பிக்கிறான். இன்னும் பேச வராத இவனுக்கு மட்டும் அந்த வீட்டில் நடக்கும் சில விஷயங்கள் தெரிய வருகின்றன.ஒரு கட்டத்தில் நந்தாவை ரவுடிகள் வந்து மிரட்டி விட்டு வீட்டிற்கு வெளியிலேயே காவலுக்கு நிற்கிறார்கள். நந்தாவின் வியாபார பார்ட்னரும் நந்தாவைத் தேடி இந்த வீட்டிற்கு வருகிறார்.ஒரு சந்தர்ப்பத்தில் சாயாவுக்கும் அந்த வீட்டில் ஏதோ இருப்பதாகத் தோன்ற பயத்தின் காரணமாக வீட்டை விட்டு கோபமாக வெளியேற முயல்கிறார். சாயாவை வீட்டிற்கு வெளியில் இருக்கும் ரவுடிகள் வெளியேற விடாமல் தடுக்கிறார்கள், பின்னர்தான் மனைவியிடம் உண்மையை சொல்கிறார். ஒருவரிடம் வாங்கிய 50 லட்ச ரூபாய் கடனுக்காக அவர்கள் இவரை ஏறக்குறைய அவர் இருக்கும் ஆனந்தவிலாஸ் வீட்டிலேயே ஹவுஸ் அரெஸ்ட்டாக வைத்து விடுகிறார்கள். கடனில் இருந்து மீள்வதற்கு அந்த வீட்டை விற்க முயல்கிறார் நந்தா. ஆனால் திடீரென எங்கிருந்தோ பறந்து வரும் ஒரு கைத்தடி நந்தாவை பலமாக அடிக்கிறது. இதன் பின்னர்தான் அந்த வீட்டில் விபத்தில் மரணமடைந்த தன்னுடைய அப்பா, அம்மாவின் ஆவி இருப்பதாக நம்புகிறார் நந்தா. இதன் பின் நடக்கும் திகிலூட்டக்கூடிய பரபரப்பான சம்பவங்கள்தான் படத்தின் மீதி கதை.

நந்தா, சாயாசிங் இருவருக்குமே பொருத்தமான கதாபாத்திரங்கள். காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். பொருத்தமான ஜோடிகளாகவே இருக்கிறார்கள். கணவன் மனைவிக்குள் நடக்கும் விஷயங்களை (அதாவது சண்டை, காதல், பாசம், அன்பு, வேறு எதுவும் கிடையாது) யதார்த்தமாகவே செய்திருக்கிறார்கள். முதலில் சாயாசிங்க அந்த வீட்டைப் பற்றி பயப்படுகிறார், பின்னர் நந்தா பயப்பட ஆரம்பிக்கிறார். மற்ற உணர்வுகளை விட பயம்தான் பெரிதாக இருக்கிறது படத்தில்.

இவர்களின் மகனாக நடித்திருக்கும் குட்டி பையன் அதிகம் கவர்கிறார். பேசாமலேயே அனைத்து உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தி ஆச்சரியப்பட வைக்கிறான்.

ஒளிப்பதிவு , பின்னணி இசை, எல்லாம் ஓகே ரகம்தான். கிராபிக்ஸ் காட்சிகள்தான் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. சில காட்சிகளில் கிராபிக்ஸ் என்பது எளிதில் தெரிந்து விடுகிறது. அந்தரத்தில் தொங்குவது , பெட்ஷீட் தானாக மேலே போவது போன்ற காட்சிகளில் கம்பி கட்டி தூக்குவதை சாதாரண ரசிகரும் புரிந்து கொள்வார்கள். ஒரு வீட்டுக்குள்ளேயே கதை நடப்பதால் கொஞ்சம் அலுப்புத் தட்டவே செய்கிறது.

சின்னத்திரையில் தொடர்களை பார்ப்பதற்கு அதிகமாக பயமுறுத்திய நாகா பெரிய திரையில் அவ்வளவாக பயமுறுத்தவில்லை.

வெள்ளி, 9 ஜூலை, 2010

மதராசபட்டிணம் - திரைவிமர்சனம்-சுதந்திர போராட்டத்தில் காதல்



தமிழ் சினிமாவில் தரமான படங்களும் வரும், தரமான இயக்குனர்களும் இருக்கிறார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கும் படம். 1945களில் இருந்த மதராச பட்டினத்தை கண்முன் நிறுத்தியிருப்பதே படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம். அதற்காக உழைத்த அனைவரையும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.
படத்தின் கதை கொஞ்சம் டைட்டானிக், கொஞ்சம் லகான், கொஞ்சம் ஆட்டோகிராப் ஆகியவற்றை ஞாபகப்படுத்தினாலும் கதை நடந்த 1945ம் வருடத்திய பின்னணி அனைத்தையும் மறக்கச் செய்து விடுகிறது.
ஒரு 80 வயது பாட்டி லண்டனிலிருந்து ஒரு கடமையை முடிப்பதற்காக 60 வருடங்கள் கழித்து சென்னைக்கு வருகிறார். ஒரு பழைய புகைப்படத்தை வைத்துக் கொண்டு அவரைத் தேடி சென்னை நகர வீதிகளில் அலைகிறார். இன்றைய நிலையில் அவர் பார்க்கும் இடங்கள், சம்பவங்களை வைத்து கதை பின்னோக்கி 1945க்கு நகர்கிறது. சென்னை மாகாண கவர்னரின் மகளாக (ஏமி ஜாக்சன்) இந்த பாட்டிதான் 60 வருடங்களுக்கு முன் 1945ல் மதராச பட்டினத்திற்கு (சென்னைக்கு) வருகிறார். வந்த இடத்தில் சலவைத் தொழில் செய்யும் ஆர்யாவின் வலிமையையும் அழகையும் கண்டு அவர் மீது காதல் கொள்கிறார். அதே சமயம் சென்னை மாகாண போலீஸ் கமிஷனராக இருப்பவரும் ஏமி மீது காதல் கொள்ள, கவர்னர் திடீரென ஏமிக்கும் போலீஸ் கமிஷனருக்கும் நிச்சயம் செய்து விடுகிறார். ஆனால் இந்த எதிர்ப்புகளை மீறி ஏமி ஆர்யா மீது தீவிரமான காதலை வளர்க்கிறார். இதனிடையே இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவு எடுக்கிறது. மகளை அழைத்துக் கொண்டு லண்டனுக்கு செல்ல முடிவெடுக்கிறார் கவர்னர். ஆனால் அவரிடமிருந்து ஏமி தப்பித்து ஆர்யாவைத் தேடி ஓடுகிறார். 1947ல் நடக்கும் இந்த காதலின் முடிவு 2010ல் எப்படி தொடர்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை.
ஆர்யாவிற்கு அவருடைய திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்பு. கதாபாத்திரத்தை உணர்ந்து அருமையாக நடித்திருக்கிறார். காதல் நாயகனாக நடிப்பதிலும், அவருடைய வீரத்தைக் காட்டுவதிலும் ஆகாவென பாராட்டும்படி நடித்திருக்கிறார்.
ஏமி ஜாக்சன் மிஸ்.இங்கிலாந்து எனத் தகவல். முதல் முறையாக நடித்திருக்கிறார். அழகான முகத்துடன் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு காட்சியில் புடவையைக் கட்டிக் கொண்டு, பொட்டு வைத்து வரும் போது, தொடர்ந்து தமிழில் நடித்தால் தமன்னாவையே தள்ளி விட்டு விடுவார் போலத் தோன்றுகிறது.
நாசர், பாலாசிங், விஎம்சி ஹனீபா, எம்எஸ் பாஸ்கர் ஆகியோரும் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.
1945-47 காலகட்டங்களை அப்படியே கண்முன் நிறுத்தியிருக்கிறார் கலை இயக்குனர். நீரவ்ஷாவின் ஒளிப்பதிவும் ரம்மியமாக அமைந்துள்ளது.
ஜிவி பிரகாஷ் இசையில், பூ பூக்கும் தருணம், ஆருயிரே பாடல்கள் மனதை வருடுகின்றன. வாம்மா துரையம்மா பாடலை உதித் நாராயணனை பாட வைத்து தமிழைக் கொலை செய்திருக்கிறார். இப்படிப்பட்ட பாடலைப் பாட தமிழில் யாருமே இல்லையா என்ன ?
கிளைமாக்சில் போலீசார் எவ்வளவோ சுட்டும் ஆர்யா, ஏமி மீது ஒரு குண்டு கூட படவில்லை என்பது போன்ற வழக்கமான காட்சிகளை தவிர்த்திருக்கலாம். சென்னை என்றால் சென்ட்ரல் ஸ்டேஷன், வால்டாக்ஸ் ரோடு மட்டும்தான் போன்றவற்றை மட்டுமே காட்டுவதை தவிர்த்து மற்ற சில பகுதிகளையும் காட்டியிருந்தால் மதராசபட்டினம் என்பதற்கு பொருத்தமாக இருந்திருக்கும். சென்ட்ரல் ஸ்டேஷன்தான் படத்தின் பெரும்பாலான காட்சிகளுக்குப் பின்னணியாக அமைந்திருக்கிறது.
இவற்றைத் தவிர பெரிய குறை தெரியாமல் விஷுவலாக காட்சிகள் நம்மை மிரள வைக்கின்றன.
இயக்குனர் விஜய் இந்த படத்தின் மூலம் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம் பெற்று விடுவார் என நம்பலாம்.

செவ்வாய், 6 ஜூலை, 2010

ராவணன் சாதித்ததா ?




மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மணிரத்னத்தின் ராவ(ண)ன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறி விட்டதென்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு பல காரணங்களை அடுக்கலாம். விமர்சன ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் பல கருத்துக்களை எழுப்பிய படம் இந்தியைப் பொறுத்த வரையில் படுதோல்வி என்று சொல்ல வைத்திருக்கிறது. ராவண் வெளியான முதல் வாரத்தில்
23,23,15,636 ரூபாய் வசூலானது என பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால் கடந்த வாரம் அதாவது இரண்டாவது வாரத்தில் இந்த படம் வசூலித்தது வெறும்
2,72,40,680 ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. (நன்றி - யாகூ மூவிஸ்) இதிலிருந்தே இந்த படத்தின் வெற்றியின் அளவை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

தமிழ் ராவணனைப் பொறுத்த வரையில் படம் வெளியான முதல் வாரத்தில் (சென்னை மட்டும்) 2 கோடிக்கு மேல் வசூலானது. ஆனால் இரண்டாவது வாரம் வசூலான தொகை வெறும் 54 லட்சம் (சென்னை மட்டும்) மட்டுமே. நன்றி - பிஹின்ட்உட்ஸ்.காம்

ரசிகர்களின் தெளிவான நிலையையே இந்த மாபெரும் (வெளியாவதற்கு முன்) படத்தின் வெற்றி புரிய வைக்கிறது.