பொக்கிஷம் திரைப்படம் ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நாற்பத்தைந்து நிமிடங்களாக இருந்தது. நேற்று இந்த நீளம் குறைக்கப்பட்டது. ஏறக்குறைய 20 நிமிடங்களுக்கு மேல் படத்தின் சில தேவையற்ற காட்சிகளை குறைத்திருக்கிறார்கள். படத்தில் இடம் பெற்றுள்ள பல சிறிய பாடல்களும், கதைக்கு தேவையில்லாத சில காட்சிகளும் நீக்கப்பட்டு விட்டன. இதை இயக்குனர் சேரனே தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையான ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனிடையே நேற்று கலைஞர் தொலைக்காட்சியிலும், இன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிபரப்பில் பங்கு பெற்ற சேரன், படத்திற்குண்டான வரவேற்பு போகப் போக அதிகரிக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
மசாலாத்தனமான படங்களையே பார்த்துப் பழகிப் போன நமக்கு, பசங்க, நாடடோடிகள், பொக்கிஷம் மாதிரியான படங்கள்தான் பொக்கிஷமாக அமையும் என்பது உண்மையான திரைப்பட ரசிகர்களின் எதிர்பார்ப்பு. விமர்சனம் என்ற பெயரில் பிளாக்குகளில் எழுதுபவர்கள் ஒரு வரைமுறை இல்லாமல், என்ன வேண்டுமானால் எழுதலாம் என நினைப்பது தவறான ஒன்று.
மூத்த பதிவர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலரின் விமர்சனத்தை நானும் படித்தேன். அவர்கள் சேரனின் நடிப்பை மிகவும் குறை கூறியிருந்தார்கள். பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கத் தயங்கும் போது பாவம் அவர் என்ன மட்டும் என்ன செய்வார், இப்படித்தான் ஆட்டோகிராப் படத்திற்கும், விக்ரம், விஜய், பிரபுதேவா போன்ற நடிகர்கள் நடிக்க முன்வரவில்லை. அதன் பின்தான் சேரனே அந்த படத்தின் நாயகனாக நடித்தார். அது இந்த படத்திற்கும் நடந்திருக்கிறது. பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க மறுத்திருக்கின்றனர்.
இன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நேயரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது சேரன் இந்த ஆதங்கத்தை தெரித்திருந்தார். விஜய் போன்ற நடிகர்கள் நடித்திருந்தால் இந்த படத்திற்கான வரவேற்பும், வெற்றியும் பிரமாதமாக அமைந்திருக்கும் என குறைபட்டுக் கொண்டிருந்தார்.
நம் மூத்த பதிவர்கள், அப்படிப்பட்ட முன்னணி ஹீரோக்களுக்கு எது நல்ல படம், எது மசாலாப்படம் என புரிய வைத்து இம்மாதிரியான படங்களில் அவர்கள் நடிப்பதற்கு கால்ஷீட் வாங்கிக் கொடுக்கலாம் என்பது என் கருத்து.
வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என கண்டபடி விமர்சனம் எழுதுவதை தயவு செய்து குறைத்துக் கொள்ளுங்கள் என் அன்பான மூத்த பதிவர்களே.
சேரன் மாதிரியான இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் இல்லையென்றால் தமிழ் சினிமாவின் தரம் என்றோ தாழ்ந்து போயிருக்கும்.
படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாகச் சொல்லப்பட்டு, பின்னர் குறைக்கப்பட்ட ஆட்டோகிராப், மாபெரும் வெற்றி பெற்றது. அது போல இந்த படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கலாம்.