

தமிழ் ரசிகர்கள் ஸ்ரீதேவியை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட மாட்டார்கள். எழுபதுகளின் கடைசியிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும், இந்திக்கு செல்லும் வரை தமிழ் திரையுலகில் கனவுக்கன்னியாக பவனி வந்தவர். சிவாஜி, கமல், ரஜினி என பெரிய ஹீரோக்களோடு மட்டுமல்லாமல் சிறிய ஹீரோக்களோடும் நடித்து பெரும் புகழ் ஈட்டியவர். இந்திக்குச் சென்றதும் ஏனோ அவர் தமிழ் ரசிகர்களையும் தமிழ் சினிமாவையும் மறந்து விட்டாலும், நாம் அவரை இன்னும் மறக்காமல்தான் இருக்கிறோம்.
1967ல் வெளிவந்த கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும நம்பர் 1 இடத்தில் பல வருடங்களாக கோலோச்சியவர்.1976ல் கே பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த மூன்று முடிச்சு அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து கமலுடன், குரு, சங்கர்லால், சிகப்பு ரோஜாக்கள், தாயில்லாமல் நானில்லை, மீண்டும் கோகிலா, வாழ்வே மாயம், வறுமையின் நிறம் சிவப்பு, நீலமலர்கள், மூன்றாம் பிறை, 16வயதினிலே ஆகிய படங்களிலும் ரஜினியுடன், தர்மயுத்தம், ப்ரியா, போக்கிரிராஜா, தனிக்காட்டு ராஜா, அடுத்த வாரிசு, நான் அடிமை இல்லை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவற்றில் பல படங்கள் வெற்றிப் படங்களே.
தெலுங்கில் என்டிஆர், ஏஎன்ஆர், கிருஷ்ணா, சிரஞ்சீவி, வெங்கடேஷ், போன்றோருடனும், பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார்.
இந்தியில் இவருடைய வெற்றிப் படங்களுக்கு கணக்கேயில்லை. பல வருடங்களாக தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் இருந்து சாதனை படைத்தவர்.பல பில்ம்பேர் விருதுகளையும், ஆந்திர, தமிழக அரசு விருதுகளையும், வென்றவர்.
மூன்றாம் பிறை படத்தில் தேசிய விருதை தட்டிச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டவர்.
100 படங்களுக்கும் மேல் நடித்த பெருமை இவருக்கு உண்டு.
அந்த பேரழகிக்கு ஆகஸ்ட் 13 இன்று பிறந்த நாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக