சனி, 28 பிப்ரவரி, 2009

ராஜாவின் பக்கம்

இளையராஜா என்ற ஒரு மாபெரும் இசைக் கலைஞனைப் பற்றிய பேச்சு இப்போது பரவலாக எழுந்துள்ளது. அது தேவையில்லாத ஒன்றுதான் என்றாலும் அந்த மாபெரும் கலைஞனைப் பற்றி மக்களிடத்தில் மீண்டும் ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியிருக்கிறது.


ஆஸ்கர் விருதை வென்று வந்த ஆஸ்கர் நாயகனான ஏஆர் ரகுமானே, நேற்று இளையராஜாவைப் பற்றி பேசும் போது அவர் ஆஸ்கர் விருதுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்ற நிதர்சனமான உண்மையைக் கூறியதே இதற்குச் சான்று.


அன்னக்கிளி தொடங்கி நான் கடவுள் வரை இளையராஜா அவர்களின் இசைப்பயணத்தில் நாம் பயணம் செய்து கொண்டிருக்கும் விதம் ஒரு சுகமானது. எத்தனை ஆயிரம் பாடல்கள், எப்படிப்பட்ட பின்னணி இசை, ஓய்வு இல்லாமல் கூட அவர் உழைத்த காலங்கள், அவருக்காகவே தவம் கிடந்தவர்கள், அவருடைய இனிமையான பாடல்களால் பேரையும் புகழையும் வாங்கியவர்கள், என இப்படி பல விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.


அன்னக்கிளி, பதினாறு வயதினிலே, கவிக்குயில், புவனா ஒரு கேள்விக்குறி, ப்ரியா, சிகப்பு ரோஜாக்கள், கிழக்கே போகும் ரயில், முள்ளும் மலரும், இளமை ஊஞ்சலாடுகிறது, கல்யாணராமன், தர்மயுத்தம், அன்பே சங்கீதா, உதிரிப்பூக்கள், உல்லாசப் பறவைகள், நிழல்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, மூடுபனி, ராஜ பார்வை, அலைகள் ஓய்வதில்லை, நினைவெல்லாம் நித்யா, பயணங்கள் முடிவதில்லை, மூன்றாம் பிறை , மெட்டி, காதல் ஓவியம், தங்கமகன், அடுத்தவாரிசு, மண்வாசனை, தம்பிக்கு எந்த ஊரு, சிந்து பைரவி, கீதாஞ்சலி, இதயக்கோயில், புன்னகை மன்னன், அம்மன் கோவில் கிழக்காலே, கடலோரக் கவிதைகள், மௌனராகம், எங்க ஊரு பாட்டுக்காரன், நாயகன், அக்னி நட்சத்திரம், வருஷம் பதினாறு, வெற்றி விழா, கரகாட்டக்காரன், கேளடி கண்மணி, ஈரமான ரோஜாவே, தளபதி, சின்ன தம்பி, என் ராசாவின் மனசிலே, இதயம், தேவர் மகன், செம்பருத்தி, எஜமான், மறுபடியும், மகாநதி, சிறைச்சாலை, காதலுக்கு மரியாதை, வீரா, சேது, ப்ரண்ட்ஸ், காசி, அழகி, பிதாமகன், விருமாண்டி, நான் கடவுள், என எனக்கு ஞாபகம் வந்த சில திரைப்படங்களின் பட்டியலை இங்கே கொடுத்துள்ளேன். இவை இளையராஜாவின் இனிய இசைக்கு எடுத்துக்காட்டு.


இசையையும், இளையராஜாவையும் ரசிப்பவர்கள் என்னுடைய இந்த சிறிய கருத்தையும் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.

வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

இரண்டு மாத தமிழ் திரைப்படங்கள் - ஒரு பார்வை

2009ம் ஆண்டில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களின் பட்டியலை முதலில் பார்ப்போம்.

அ ஆ இ ஈ, வில்லு, காதல்னா சும்மா இல்ல, படிக்காதவன், என்னை தெரியுமா, வெண்ணிலா கபடி குழு, கஜா, சற்று முன் கிடைத்த தகவல், பேட்டராசு, நான் கடவுள், குடியரசு, பெருமாள், சிவா மனசுல சக்தி, தநா 4777, லாடம், தீ, இரு நதிகள் ஆகியவை.

18 படங்கள் வெளியாகியுள்ளன, ஆனால் இவற்றில் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்கள், மக்களைக் கவர்ந்த படங்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணி விடலாம். வெண்ணிலா கபடி குழு, நான் கடவுள் படங்கள் மட்டுமே படைப்பு ரீதியாக கவர்ந்த படங்கள் என எடுத்துக் கொள்ளலாம். மற்ற படங்கள் வெறும் கமர்ஷியலுக்காக எடுக்கப்பட்ட படங்களே. வழக்கமான நகைச்சுவை, குத்துப் பாட்டு, கவர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்கள்தான். சில படங்கள் வந்த சுவடு கூட தெரியாமல் போய் விட்டன.

2009 ஆரம்பமே கொஞ்சம் ஆட்டத்துடன்தான் ஆரம்பித்துள்ளது. போகப் போக சரியாகி விடுமா ?

வியாழன், 26 பிப்ரவரி, 2009

ராஜா ராஜாதான்

ஆஸ்கர் விருது வாங்கவில்லை என்றாலும் ஆயிரம் ஆயிரம் ரசிகர்களின் உள்ளத்தில் குடி கொண்டிருக்கும் எங்களின் இசைஞானி இளையராஜா என்றுமே ராஜாதான். அவருடைய இசையும் பாடல்களும் விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவை. அவருடைய இசைக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் எப்போதுமே இருக்கிறது. அதை யாராலும் மாற்றவும் முடியாது மாற்றி விடவும் முடியாது. இன்று திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் எத்தனையோ பேருக்கு அவருடைய இசையும் ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை. அவருடைய பாடல்களுக்காகவே ஓடிய எத்தனையோ திரைப்படங்களை உதாரணமாகச் சொல்லலாம். அவராலேயே வெற்றி பெற்று இன்று பேர் பெற்ற எத்தனையோ பேர் அதை மறந்து விட முடியாது. எழுத வேண்டும் என்பதற்காக என்னென்னவோ எழுதுபவர்களைப் பற்றி என்னைப் போன்ற ராஜாவின் ரசிகர்கள் ஒரு போதும் கவலைப்படப் போவதில்லை.

விருதுகள் மட்டுமே ஒருவரின் திறமைக்கு அளவுகோல் அல்ல என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஏஆர்.ரகுமான் அவர்களுக்கு கிடைத்த விருதுகளுக்காக நாம் நிச்சயம் அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். அவருடைய சாதனைகளில் இதுவும் ஒரு மணிமகுடம்தான் இன்னும் பல விருதுகள் கிடைக்க அவரை வாழ்த்துவோம்.